ரசிகர்கள் குஷி! கர்நாடகாவில் 130 திரையரங்குகளில் காலா நாளை ரிலீஸ்!
ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படத்திற்கு, கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நாளை 130 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது காலா திரைப்படம்.
ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படத்திற்கு, கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நாளை 130 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது காலா திரைப்படம்.
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இப்படத்தை திரையிட தடை விதித்தது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை.
‘காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் இதுகுறித்து மனு தாக்கல் செய்தது. அதில் ‘காலா’ படம் வருகிற 7–ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். கர்நாடகாவில் மட்டும் காலா வெளியாகவில்லை என்றால் கேள்வி எழும், அது கர்நாடகாவுக்கும், அந்த மாநில மக்களுக்கும் நல்லதல்ல. காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.
காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு கர்நாடகா முதலவர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடகாவில் 130 திரையரங்கில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.