Video: பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்!
பாராளுமன்ற விவாதத்தின் போது எம்.பி-இன் குழந்தைக்கு, சபாநாயகர் புட்டி பால் ஊட்டிய விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
பாராளுமன்ற விவாதத்தின் போது எம்.பி-இன் குழந்தைக்கு, சபாநாயகர் புட்டி பால் ஊட்டிய விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
நியூசிலாந்து சட்டமியற்றுபவர்கள் நடப்பு வாரம் பாராளுமன்றத்தில் எரிபொருள் விலையை கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்க, சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் அவையைப் பார்த்து, “சத்தம் போடாதீர்கள், குழந்தை பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
தொழிற்கட்சி எம்.பி-யான தமதி கோஃபி மற்றும் அவரது கணவருக்கும் வாடகை தாய் மூலம் கடந்த மாதத்தில் டென்கையாய் என்ற குழந்தை பிறந்தது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தமதி கோஃபி அக்குழந்தையை நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்திருந்தார்.பின், தமதி கோஃபி சபையில் எரிபொருள் விலை தொடர்பான விவாதத்தில் பேசிகொண்டிருக்கும் போது குழந்தை அழஆரம்பித்தது.
உடனே, சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் குழந்தையை வாங்கி நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் விவாதத்தில் ஈடுபடுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பின்னர், பாட்டிலில் பால் கொடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
இதுகுறித்து ட்ரவோர் மல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "பொதுவாக சபாநாயகர் நாற்காலியில் சபாநாயகர் மட்டுமே அமர்வார்கள். ஆனால் இன்று ஒரு சிறப்பு விருந்தினர் அங்கு வந்து என்னுடன் அமர்ந்திருந்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக உலகளவில், பிரதமர் பதவியிலிருந்து மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பிரதமர் என்ற பெருமையை நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் பெற்றியிருந்தார். அதன்பின்னர் தனது குழந்தையுடன் ஐநா-வின் பொது கூட்டத்தில் பங்கேற்றார். இவரின் இந்தச் செயலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து சபாநாயகர் உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.