காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #IAmRahulGandhi மற்றும் #HappyBirthdayRahulGandhi என்னும் ஹாஷ்டேகுகள் பிரபலமாகி வருகின்றன.


இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களை ஊக்கப்படுத்திய ஐந்து தருணங்களை திரும்பிப் பார்க்கும் ஒரு குறுகிய வீடியோவை காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



சமீபத்தில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி "சௌதிகார் சோர் ஹே" என்னும் முழக்கத்தை கையில் எடுத்தார். எனினும் அவரது யுக்திகள் தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் தொடருவதிலும் பல குழப்பங்கள் நிலவியது.



மக்களவை தேர்தல் முடிவிற்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சி தொண்டர்கள் அமைதி காத்து வந்த நிலையில் இன்று ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.