அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இந்த விழாவில் 24 பிரிவுகளின் கீழ் சிறந்த திரைக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிஸ்ஸௌரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஃப்ரான்சஸ் மெக்டார்மண்ட் வென்றார். இந்த நிலையில், அவரிடமிருந்து விருதைத் திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்தச் சம்பவத்தை லாஸ் ஏஞ்சல் போலீஸார்  உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக 47 வயதான டெர்ரி ப்ரையண்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்குப் பின்னர் நடந்த விருந்தில் அவரது விருதை ப்ரையன்ட் திருடியதாகவும், பின்னர் அந்த விருதுடன் ஃபேஸ்புக் லைவில் தோன்றியதாகவும் லாஸ் ஏஞ்சலிஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர். 


ஆஸ்கர் விருது திருடப்பட்டதை அறிந்து நடிகை ஃப்ரான்சஸ் மெக்டார்மண்ட் கதறி அழுததாகவும், அவரின் கணவரும், இயக்குநருமான ஜோயல் கோயன் அவரை சமாதானப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, டெர்ரி ப்ரையண்டைக் கைது செய்த லாஸ் ஏஞ்சலிஸ் போலீஸார், அவரிடமிருந்த ஆஸ்கர் விருதை பறிமுதல் செய்தனர். 


பின்னர், அந்த விருது ஃப்ரான்சஸ் மெக்டார்மண்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.


டெர்ரி ப்ரையண்ட் முகநூலில் பதிவிட்ட வீடியோ!