அப்பார்ட்மென்டில் லிஃப்ட், ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர் என படி ஏறுவதை நாம் மறந்து பல காலமாகிவிட்டது. நம்முடைய வேகத்துக்கு எஸ்கலேட்டரும், லிப்டும் தான் ஈடுகொடுக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிற்நுட்பங்கள் அதிகமாக அதிகமாக அவற்றால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாகிறது. சமீப காலங்களாக எஸ்கலேட்டரில் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க லிஃப்ட் மற்றும் எக்ஸ்லேட்டரில் செல்லும்போது கவனமாக இருப்பதற்கான சில டிப்ஸ்!


இதோ....உங்களுக்கான டிப்ஸ்...! 


> லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் செல்லும் போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது சிறுவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு உற்சாகம் மட்டுமே கண்ணை நிறைத்து இருக்கும். எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள். 


> லிஃப்ட் கதவுகள் மூடும் போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்து கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும் போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிட நேரிடும்.


> லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும் போது முழு கவனம் அவர்கள் மீது இருக்கட்டும். போனில் பேசிக் கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் முற்றிலும் தவிர்க்கவும்.


> குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.


> லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.


> லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.


> எஸ்கலேட்டரில் செல்லும்போது சுடிதார் துப்பட்டா புடவை ஆகியவற்றின் மீது கவனம் இருக்கட்டும். அதேபோல் ஷாப்பிங் செய்த பைகளை மிகவும் தாழ்வாக தொங்கவிட்டுச் செல்லாதீர்கள்.