இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் "Statue of Unity" சிலையின் தமிழ் மொழிபெயர்ப்பு 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் நர்மதா நதியின் கரையோரத்தில், சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயரமான சிலை சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். உலகில் உள்ள சிலைகளில் இதுவே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. 


இந்த சிலை சாதாரண மனிதனின் உயரத்தை விட நூறு மடங்கு அதிகமான உயரம் என்றும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரமுடையது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்பைக் கொண்டு வந்து "இரும்பு மனிதர்" பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


உலகிலேயே மிகவும் உயரமான இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை காண வருவோருக்கு ஏதுவாக "Statue of Unity" என்ற ஆங்கில வாசகத்தை மொழி பெயர்த்து பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. 


இந்திய மொழிகள் ஐந்து, வெளிநாட்டு மொழிகள் ஐந்து என பத்து மொழிகளில் "Statue of Unity" என்ற வார்த்தை மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. அதில், தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் மகிழ்சிகரமாக இருந்தாலும், அதனை மொழி பெயர்த்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 



"Statue of Unity" தமிழில், மொழிபெயர்த்து எழுதாமல் ஒலி பெயர்த்து எழுதியுள்ளனர். அதுவும் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. 



கடந்த 2013 ஆம் ஆண்டில் தாமே அடிக்கல் நாட்டிய இந்த சிலையை இன்று பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன் அருகே வால் ஆஃப் யூனிட்டி எனப்படும் ஒற்றுமையின் சுவரையும் பிரதமர் திறந்து வைத்தார்.