ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆனந்த் குமார், "சூப்பர் 30" என்னும் பயிற்சி மையம் மூலம் ஆண்டுக்கு 98 சதவீதம் பேர் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இதைப்பார்க்கும் போது எவ்வளவு ஆச்சரியமாகவும், அதேவேளையில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த "சூப்பர் 30" பயிற்சி மையத்தை 2002-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் ஆனந்த் குமார் பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ஆனந்த் குமாரின் திறமை:


இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவில் வசித்து வந்த ஒரு ஏழை குடும்பத்தில் 1973-ம் ஆண்டு பிறந்தவர் தான் ஆனந்த குமார். அவரது தந்தை பெயர் ராஜேந்திர பிரசாத் மற்றும் தாயார் பெயர் ஜெயந்தி தேவி. தந்தை ரயில்வே துறையில் தபால் ஊழியராக வேலை பார்த்தார். சிறு வயது முதல் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் வறுமையின் காரணமாக பல வாய்ப்புகள் பறி போவதை கண்டு மனம் வேதனை அடைந்தார். ஆனாலும் தன்னமிக்கை இழக்காமல் வறுமையுடன் போராடி தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தார். கணக்குப் பாடத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், அவற்றைத் தீர்ப்பதில் இருந்த முனைப்பு, எண்களை ஆனந்த் கையாண்ட விதம் ஆகியவை அவரைத் தனித்திறன் மிக்கவராக அடையாளம் காட்டின. ஆனந்த் குமாரின் திறமையை கண்டு அவரது ஆசிரியர்கள் மற்றும் கூட படிக்கும் மாணவர்கள் என அனைவரும் வியந்தனர். மற்ற மாணவர்களை காட்டிலும் ஆனந்த் குமார் தனித்திறன் மிக்கவராக இருந்தார். கணித மேதை ராமானுஜத்தின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டவராக ஆனந்த குமார் இருந்தார்.


 


நிறைவேறதா கேம்பிரிட்ஜ் கனவு:
 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் வறுமையின் காரணமாக அவர் லண்டன் செல்லக்கூட பணம் இல்லை. அத்தகைய சமயத்தில் எதிர்பாராதவிதமாக தந்தை மரணமடைந்தார். இதனால் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்வது என்பது எட்டாக்கனியாகியது. தனது குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும் என முடிவு செய்தார். அவரது தயாருக்கு அப்பளம் செய்யத்தெரியும். எனவே அப்பளம் செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அம்மா அப்பளம் தயாரித்துத் தர, ஆனந்த் குமார் மற்றும் அவரது சகோதரர் கடையாக விநியோகம் செய்தார்கள். இதன் மூலம் ஓரளவுக்கு வறுமை ஈடுகட்டியது. மேலும் கணித ஆசிரியராகவும் தான் வசிக்கும் பகுதியில் டியூசன் எடுத்தார். 


 


அரசு வேலை வேண்டாம்:


இந்நிலையில், தந்தை இறந்ததால், அவரது வேலை கிடைத்தது. ஆனால் அவரது தயார் நீ நன்றாக படிக்க வேண்டும் என ஆனந்த் குமாரிடம் கூறியதால், அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு தனது கனவை நனவாக்க தொடங்கினார். தனது தாயார் மற்றும் சகோதரிடம், நம்மை போல கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என ஆலோசனை செய்கிறார். 


 


"சூப்பர் 30" பயிற்சி மையம் ஆரம்பம்:


அப்பொழுது உருவானது தான் "சூப்பர் 30" பயிற்சி மைய திட்டம். இந்த பயிற்சி மையம் மூலம் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு வருடமும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த திறமையான 30 மாணவர்களை நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கி, ஐஐடி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதி மற்றும் நன்கொடை யாரிடமிருந்தும் பெறுவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்தது.


 


சூப்பர் 30 தேர்ச்சி வளர்ச்சி:


2002-2003 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கிய "சூப்பர் 30" பயிற்சி மையம், முதலாமாண்டு 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஆனந்த குமாரின் திறமை மேலும் பல மடங்கு பிரபலமானது. அடுத்த சில ஆண்டுகளிலிருந்து தொடர்ச்சியாக 30 பேரும் ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.


2003 முதலாம் ஆண்டு 30 மாணவர்களில் 18 மாணவர்வர்கள்,
2004 இரண்டாம் ஆண்டு 30 மாணவர்களில் 22 மாணவர்வர்கள், 
2005 மூன்றாம் ஆண்டு 30 மாணவர்களில் 26 மாணவர்வர்கள்,
2007 நான்காம் ஆண்டு 30 மாணவர்களில் 28 மாணவர்வர்கள்,
2008 ஐந்தாம் ஆண்டு 30 மாணவர்களில் 28 மாணவர்வர்கள் என ஐஐடி ஜேஇஇ (IIT - JEE)க்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். பின்னர் முப்பதுக்கு முப்பது பேருமே ஐஐடி-ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.


 


கொலை வெறி தாக்குதல்:


கோச்சிங் சென்டர்கள் மூலம் கோடிக் கோடியாய் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், ஆனந்த் குமாரின் வளர்ச்சியால் தாங்கள் பாதிக்கப்படுவதால், ஆனந்த் குமாரை பலமுறை மிரட்டுகின்றனர். ஆனால் ஏழை மாணவர்களுக்காக தொடர்ந்து இலவச சேவை செய்து வரும் ஆனந்த் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆனந்தின் மீது கத்தி படாமல், அவரது பயிற்சி மையத்தின் அலுவலரான முன்னா என்பவர் மேல் கத்தி பட்டு ரத்த இழப்பு ஏற்படுகிறது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். இச்சம்பவத்தை அடுத்து ஆனந்த் குமாருக்கு பாதுகாப்பு வழங்கியது பீகார் அரசு. 


 


வாழ்க்கை திரைப்படம்:


இவரைப்பற்றி நிறைய புத்தகங்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவரது வாழ்க்கையை மையமாக வைத்து "Super 30" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆனந்த் குமாராக பாலிவுட் ஸ்டார் ஹ்ரிதிக் ரோஷன் நடிக்கிறார்.


சூப்பர் 30 பற்றி டிஸ்கவரி சேனலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒளிபரப்பட்டது. இவரைப்பற்றி பிபிசி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் எழுதி உள்ளது. இவரைப்பற்றி ஆவணப்படம் வந்துள்ளது. இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். 


எவ்வித பணத்தாசைக்கும் உள்ளாகாமல், தொடர்ந்து இலவசமாக தனது தனித்துவமான கற்பித்தல் மூலமாக ஏராளமான மாணவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாதா உயரத்தை தந்துள்ளார். பல ஏழைக்குடும்பங்களில் ஒளியேற்றி வருகிறார் ஆனந்த் குமார். அனைத்து மாணவர்களும் இவரைப்பற்றி தெரிந்துக்கொள்வது நல்லது.