பாஸ்போர்ட்டை தொலைத்த அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய புதுமாப்பிள்ளைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவைச் சேர்ந்த தேவதா ரவி தேஜா என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி இந்தியாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேவதா ரவி தேஜா தன்னுடைய பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் தொலைத்துவிட்டார். 


இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ``என்னுடைய திருமணம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தற்போது என்னுடைய பாஸ்போர்ட்டை நான்தொலைத்து விட்டேன். ஆகஸ்ட் 10-ம் தேதி நான் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும். தயவுசெய்து, நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். நான் உங்களை மட்டும்தான் நம்பியுள்ளேன்''  என்று கோரிக்கை வைத்துள்ளார். 



இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் ``உங்கள் பாஸ்போர்ட்டை தவறான நேரத்தில் தொலைத்து விட்டீர்கள். திருமண நேரத்துக்குச் செல்ல கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன்'' என உடனடியாக பதிலளித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நவ்தேஜ் சர்னாவிடம் பேசிய சுஸ்மா, பாஸ்போர்ட்டை தொலைத்த தேவதா ரவி தேஜாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் படி உத்தரவிட்டார். 



இதற்காக சுஷ்மா ஸ்வராஜுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் தேவதா ரவி தேஜா. சுஷ்மா ஸ்வராஜின் இந்த உடனடி நடவடிக்கைக்குப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.