கடந்த வாரம் வெளியான "திருட்டுபயலே 2" வெற்றி பெற்றுள்ள நிலையில் நடிகர் பிரசன்னா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்  நடிகைகளுக்கு, தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு, ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் நன்றி தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கையில்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "திருட்டுபயலே 2 " என்  இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த  "ஜவான்" என்ற திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  


மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர்  நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக "5ஸ்டார்" படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.


 எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி இணையதள ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . உங்கள் பாராட்டுக்கள் பெரும் உந்து சக்தி எனக்கு. சில நேரங்களில் சில ஊடகங்கள் என்னைக் காயப்படுத்தியதும் உண்டு. அக்காயங்கள் என்னை மேலும் வலுவுடன் போராடவே உதவியுள்ளது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் எதிர்கொள்ள பழக்கப்படுத்தியுள்ள அக்காயங்களுக்கும் பெருநன்றி.


15 ஆண்டுகால இப்பயணம் பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற துணை ஒன்று என் படங்களை பார்த்து ரசித்து பாராட்டி எப்போதும் மனதிலே நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்த ரசிகர்கள்தான் அந்தத் துணை. ஆண்டுகள் கடந்தும் என் படங்களை நினைவுகூர்ந்து பாராட்டி ஒவ்வொரு புது முயற்சியிலும் தோள்தட்டி, எனக்கான உயரம் பெரிதென்றும் அதற்க்கான அங்கீகாரம் கிடைக்குமென்றும் எப்போதும்  சொல்லிச்சொல்லி துணை நின்றிருக்கும் என் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் இதயத்தின் அடித்தளத்தினின்று.


எனக்காக  எப்போதும் பிரார்த்திக்கும் அம்மா அப்பா தம்பிக்கும், யாரையும்விட என்னை முழுமுற்றிலும் நம்பி என் போராட்டங்களிலெல்லாம் கேள்வியின்றி துணை நின்று பலம்சேர்த்த அன்பு மனைவிக்கும், குடும்பத்தாருக்கும், என் நலனில் அப்போதும் அக்கறையுள்ள நண்பர்களுக்கும் நன்றி சொல்லி தீராது.


என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கும் உண்மையுள்ள பிரசன்னா.


இவ்வாறு வெளியிட்டுள்ளார்.