Video: பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தந்தை செய்த பிரம்மாண்ட செயல்
மகாராஷ்டிராவில், பிறந்த குழந்தையை ஹெலிகாப்டரில் ஒரு குடும்பம் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதனபடி அந்த பெண் குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறுகையில், எங்கள் மொத்த தலைமுறையிலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. அதனால், நாங்கள் எங்களது மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம். அதற்காக, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் எங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்றார். விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்பு அடைந்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவ வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தகக்து.