ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர், நகரத்தில் கொரோனா முழு அடைப்பு விதிகளை மீறியவர்களை கண்டிப்பதற்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா முழு அடைப்பு விதிமுறைகளை மீறவேண்டாம் என காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் மக்கள் வெளியில் நடமாடுவதை கண்ட காவல்துறையினர், மக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.


அந்த வகையில் செவ்வாய் அன்று விஜயவாடா காவல்துறையினர், முழு அடைப்பு விதி மீறி வெளியே வந்தவர்களை பிடித்து 500 முறை 'I am sorry' என எழுதுமாறு பணித்துள்ளனர். முழு அடைப்பு காலத்தில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறுபவர்களை இது தடுக்கும் என்று காவல்துறை நம்புகிறது. தற்போது நகரத்தில் ஆறு சிவப்பு மண்டலங்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரிப்பு குறித்து இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் ஏற்கனவே கவலை கொண்டுள்ளனர், மற்றும் கொரோனா வைரஸுக்கு நேர்மறையான சோதனை முடிவு பெற்ற சுமார் 30 நோயாளிகளின் மூலத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து காவல்துறை ஆணையர் துவாராகா திருமலை ராவ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., "தற்போது கண்டறியப்படும் நோயாளிகள் பெரும்பாலும் உள்ளூர் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் காய்கறிகளை வாங்க மட்டுமே சென்றார்கள் எனவும், இந்த ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதும் உறுதியாகியுள்ளது. எனவே உள்ளூர் பயனத்தின் போதும் மக்கள் சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தேவையின்றி அவர்கள் வெளியே வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


ஆந்திராவில் ஹாட்ஸ்பாட்கள் தொடர்ந்து புதிய நேர்மறையான வழக்குகளை பதிவு செய்துவருகின்றன. இதனிடையே செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் காரணமாக மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757-ஆக உயர்ந்துள்ளது.


மாநிலத்தில் இப்போது மொத்தம் 639 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. இவர்களில் 40 நோயாளிகள் ICU-வில் உள்ளனர், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.