Watch: பயிற்சி வகுப்பில் பாம்பு டான்ஸ்; ஆசிரியருக்கு ஆப்பு வைத்த நிர்வாகம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது அரசு ஆசிரியர்கள் நாகின் நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது அரசு ஆசிரியர்கள் நாகின் நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பு இடைவேளையின்போது, ஆசிரியை ஒருவருடன், அங்கிருந்த 2 ஆசிரியர்கள் சேர்ந்து, பாம்பு போன்று நாகின் நடனமாடினர். இதனை மற்ற ஆசிரியர்கள் பார்த்து ரசித்தவாறு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
இதனைப் பார்த்த ஜலோர் மாவட்ட கல்வி அதிகாரி, பயிற்சி வகுப்பில் நடனமாடிய பெண் ஆசிரியரை, கடந்த புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் ஆசிரியை உடன் நடனமாடிய 2 ஆசிரியர்களும், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால், இதுறித்து விளக்கம் கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட கல்வி அதிகாரி, ‘நடனமாடுவதிலோ, விளையாடுவதிலோ தவறு இல்லை. ஆனால் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்.
இதனிடையே ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது தானே, அவர்கள் நடனமாடினார்கள். அரசு ஊழியர்கள் என்றால், அவர்களது சக ஊழியர்களுடன் நேரத்தை நல்ல முறையில் செலவிடக்கூடாதா’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சஸ்பென்ட் உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.