மகாபலியை வீட்டிற்கு அழைக்கும் ஓணம் பண்டிகை! கேரளாவில் குதூகலமாய் கொண்டாடும் மலையாளிகள்!
King Mahabali Onam arrival 2024: வாமனராய் வந்து மகாபலியை சிரஞ்சீவியாய் வாழ வைத்த வாமன ஜெயந்தி நாளும், ஓணம் பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடலாமா? தெரிந்துக் கொள்வோம்.
ஓணம் பண்டிகை களைகட்டிவிட்டது. நல்லாட்சி புரிந்த மன்னனை வீட்டிற்கு வரவழைத்து கொண்டாடும் திருவிழாவான ஓணம் பண்டிகை, ஆட்சி நன்றாக இருந்தால் மக்கள் காலத்திற்கும் மறக்கமாட்டார்கள் என்பதற்கு உதாரணம். மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசன் மக்களுக்கு நல்லது செய்து மகாபலி சக்ரவர்த்தி என்று பெயர் பெற்றிருந்தார். ஆனால் அவரை ஏன் அழிக்க பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவரை என்றென்றும் மறக்கமுடியாத ஆளுமையாக மாற்றிவிட்டார்.
அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய அரசனாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களின் நலன் அறிய, ஓணம் பண்டிகையில் கேரளத்திற்கு வருவதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வழக்கம்போல கொண்டாடப்பட்டாலும், வயநாடு பகுதியில் இயற்கை நடத்திய கோரத்தாண்டவத்தில் இருந்து வெளிவராத கேரள மக்களின் உற்சாகம் சற்று குறைந்தே இருப்பதாக கூறப்படுகிறது.
ஓணம் பண்டிகை 2024
மலையாளத்தில் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி சக்ரவர்த்தி மக்களை காண வருவதாக நம்பப்படுகிறது.
பக்தி மற்றும் ஆட்சிக்கு உதாரணம் என்றால் அது மகாபலி சக்ரவர்த்தி தான் என்று சொல்கிறது புராணக்கதை. ஒரு பிறவியில் எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி, சிவன் கோயிலில் சுற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது, சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. எலியின் வால் தெரியாமல் அந்த விளக்கின் திரியின் மீது தற்செயலாக பட்டதால் விளக்கு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது.
தன்னையும் அறியாமலேயே புண்ணிய காரியம் செய்ததால், புகழ் வாய்ந்த சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தி அடுத்த பிறவியில் இருந்தார் என்று கூறப்படுகிறது. கேரளாவை ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியில் குறையே இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
தேவர்களுடன் சண்டையிட்டபோதும் அவர்களை வென்றார் ராஜா மகாபலி. அசுரர்கள் வெற்றி பெற்று தேவர்கள் தோற்பது உலகிற்கு நல்லதல்ல என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதாக காக்கும் கடவுள் வரம் அளித்தார்.
வாமன அவதாரம்
மக்களின் நலன் காக்கும் மன்னன் மகாபலி, நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினார். வேள்வியின் இறுதியில் தான, தர்மம் வழங்கப்பட்டது. தேவர்களை காக்கும் கடமையை நிறைவேற்ற இதுவே சரியான சமயம் என்று கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்தார் விஷ்ணு.
வேள்வி நிறைவு
மகாபலி சக்கரவர்த்தி செய்த பிரம்மாண்டமான வேள்வி நிறைவு பெற்றபோது, அரசர் மகாபலி, தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். தானம் கொடுப்பது நிறைவுறும் சமயத்தில் வாமனன் அங்கு வந்து அரசர் பலியிடன் தானம் கேட்டார்.
மூன்றடி மண்
வாமனனைப் பார்த்த மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. இப்போது தான் தானம் கொடுக்கும் கடமை முடிந்தது என்று சொன்னதும், மூன்றடி உயரம் கொண்ட சிறுவனாகிய எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். மகாபலியும் மனம் மாறினார்.
ஆனால், மகாபலியின் குருவான சுக்ராச்சாரியாருக்கு வந்திருப்பது சாதாரண சிறுவனில்லை என்று புரிந்துவிட்டது. அரசரிடம் தானம் அளிப்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும், வந்திருப்பவர் விஷ்ணுவாக இருக்கலாம் எனவே தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றும் அரசரிடம் சொன்னார். குரு சொன்னதை ஏற்காத மகாபலி சக்கரவர்த்தி, மகாவிஷ்ணுவே தானம் பெற வந்துள்ளார் என்றால் நான் சிறந்தவன், கேட்ட தானத்தைக் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டார்.
மேலும் படிக்க | பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!
ஆனால் அரசரை காப்பாற்ற எண்ணி, தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, வண்டு அவதாரம் எடுத்து கமண்டலத்தில் நீர் வரும் துளைக்குள் சென்று சுக்ராச்சாரியர் அடைத்துக் கொண்டார். அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது.
வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி
மூன்றடி மண்ணை தானமாக கொடுக்க பலி அரசர் கொடுத்தபோது, சுயரூபத்தைக் காட்டிய வாமனர், ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார். பிறகு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார்.
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லாட்சி புரிந்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என வாமன ரூபர் கேட்க, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என தெரிந்து செல்லல விரும்புகிறேன் என கூறினார்.
பலி சக்கரவர்த்தியின் ஆசையை வரமாகக் கொடுத்த விஷ்ணு, அரசர் மகாபலி தன் நாட்டு மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று வரம் அளித்தார். அன்று முதல் ஆண்டுக்கு ஒரு முறை மகாபலி அரசர் தனது மக்களை வந்து பார்த்து செல்வதை மக்கள் கொண்டாடுகின்றனர். அது தான் திருவோணம் பண்டிகை நாளாகும். அதனால் தான் வாமனராய் வந்து மகாபலியை சிரஞ்சீவியாய் வாழ வைத்த வாமன ஜெயந்தி நாளும், ஓணம் பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ