3-வது ஒருநாள்: இந்தியா வெற்றி; 3-0 எனக் கைப்பற்றியது!!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் துவக்க ஆட்டகாரர்களாக ஆரோன் பிஞ்ச் 124(125) மற்றும் டேவிட் வார்னர் 42(44) களமிரங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். எனினும் இதர வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மித் 63(71) அவருக்கு துனை நின்றார். இதனால் அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. எனினும் ஆசி., 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 15 ஓவரில் 100 ரன்னை எட்டியது.
ரோகித் சர்மா 42 பந்திலும், ரகானே 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 21.4 ஓவரில் 139 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 62 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் ரகானே 76 பந்தில் 9 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 28 ரன்னிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் வெளியேறினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா உடன் மணீஷ் பாண்டே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, 72 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி களம் இறங்கினார். இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 36 ரன்னுடனும், டோனி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியுள்ளது.