`பந்தை சேதப்படுத்தும் இந்தியா` பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு - ரோஹித்தின் பதில் என்ன?
India National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
India National Cricket Team, Rohit Sharma: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதுதான் ஐசிசி தொடர்களில் அந்த அணியின் முதல் அரையிறுதி வெற்றியும், முதல் இறுதிப்போட்டி தகுதியுமாகும்.
அந்த வகையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கயானாவில் நடைபெறும் இந்த போட்டி இந்தியா நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டு முறையும் (2010, 2022), இந்திய அணி ஒருமுறையும் (2007) டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளன.
இன்சமாம் குற்றச்சாட்டு
2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர் இந்திய அணியால் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றவே இயலவில்லை. நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, கனடாவுக்கு எதிரான குரூப் சுற்று போட்டி மட்டுமே மழை காரணமாக ரத்தானது. எனவே, இந்திய அணி அதன் ஐசிசி கோப்பை தாகத்தை தீர்க்கவும், ரோஹித் - விராட் ஆகியோருக்கு இது கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு சிறந்த பிரியாவிடை அளிக்கவும் நடப்பு தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், அரையிறுதி போட்டிக்கு முன் ரோஹித் சர்மா நேற்று கயனாவில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக இந்திய அணியின் மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் (Inzamam-ul-Haq) பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதாவது, இந்திய அணி பந்தை சேதப்படுத்தி அதன்மூலம் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுகிறார்கள் என கூறியிருந்தார்.
ரிவர்ஸ் ஸ்விங் ஆவது எப்படி?
ஊடகம் ஒன்றில் பேசிய இன்சமாம்,"(ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்) 15ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசும்போது ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. புதிய பந்தில் அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவா? இதன் பொருள் என்னவென்றால் 12-13வது ஓவரில் பந்து ரிவர்ஸ் செய்வதற்கு தயாராக இருந்தது, அது ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் திறனை பெற்றிருக்கிறது. 15ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. எனவே, நடுவர்கள் தங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இதைச் செய்திருந்தால், பலரும் கூச்சலும், கூப்பாடும் போட்டிருப்பார்கள். பந்தை எப்படி ரிவர்ஸ் செய்வது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அர்ஷ்தீப் சிங் 15ஆவது ஓவரில் பந்தை ரிவர்ஸ் செய்ய முடிந்தால், பந்தில் சில வேலைகள் (சேதம்) செய்யப்பட்டுள்ளன. பும்ரா அதைச் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம், அவருடைய ஆக்சன் அதற்கேற்றாற்போல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஆக்சன் அல்லது வேகம் உள்ள மற்றவர்கள் அதைச் செய்தால், பந்து சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்" என பேசியிருந்தார்.
தெளிவுபடுத்திய ரோஹித்
இதற்கு செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"நான் என்ன பதில் சொல்லவது?. நீங்கள் அதிக வெயில் இருக்கும் நேரத்தில் விளையாடுவதால், ஆடுகளங்கள் இங்கே மிகவும் உலர்ந்துபோகின்றன. அனைத்து அணிகளும் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுகின்றன. சில நேரங்களில் உங்கள் மனதை திறக்க வேண்டும். போட்டியின் காலச்சூழல் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். போட்டி நடைபெறும் இடம் ஒன்றும் ஆஸ்திரேலியாவோ அல்லது இங்கிலாந்தோ அல்ல. அதைத்தான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
மேலும் படிக்க | இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ