இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?

IND vs ENG Semi Finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற இந்திய அணி சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும். அவற்றை விரிவாக இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2024, 02:39 PM IST
  • 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து சாம்பியன்
  • அதன் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோற்றது.
  • அதற்கு இந்தியா இப்போது பழிவாங்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா? title=

IND vs ENG Semi Finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 8 சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. நாக்-அவுட் சுற்றுகள் நாளை முதல் தொடங்குகிறது. நாக் அவுட் சுற்றில் 2 அரையிறுதி போட்டிகளும், 1 இறுதிப்போட்டியும் மிச்சம் உள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இந்த நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 

இந்திய நேரப்படி நாளை (ஜூன் 27) காலை 6 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் (South Africa vs Afghanistan) அணிகள் மோத உள்ளன. இரண்டாவது அரையிறுதிப் போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்கும். இதில் இந்தியா - இங்கிலாந்து (India vs England) அணிகள் மோதுகின்றன. பலரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் பழிவாங்கும் படலம்

கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி (Team India), இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியிருந்தது. தற்போது மீண்டும் இந்த தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திப்பதால் இந்திய அணி அதன் பழிவாங்கலை சரியாக திட்டமிட்டிருக்கும் எனலாம். 

நடப்பு தொடரில் இந்திய அணி குரூப் சுற்று போட்டியில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. கனடாவுக்கு எதிரான போட்டி மட்டும் மழை காரணமாக ரத்தானது. தொடர்ந்து, சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கேதசம், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கோ (Team England) ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்தானது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்தாலும் கடைசி 2 குரூப் போட்டியில் வென்று தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது. சூப்பர் 8 சுற்றிலும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தாலும் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்காவை வென்று தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | 1 அரையிறுதியில் கூட ஜெயிக்கல... தென்னாப்பிரிக்காவின் பரிதாப நாக் அவுட் வரலாறு - முழு விவரம்

இங்கிலாந்து திணறும்...

அந்த வகையில், தற்போதைய சூழலில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்பதால் ஆடுகளம் பெரும்பாலும் சுழலுக்குதான் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பந்தும் பெரிதாக பௌன்ஸ் ஆகாது என்பதால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களிடம் இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவார்கள் என கூறப்படுகிறது. சுழலுக்கு எதிராக இந்திய பேட்டர்களின் கால் அசைவு கச்சிதமாக இருக்கும் என்பதாலும், இந்திய பேட்டர்கள் அதற்கு பழக்கப்பட்டவர்கள் என்பதாலும் இந்திய அணிக்கு அது பிரச்னையாக இருக்காது என்றும் கணிக்கப்படுகிறது.

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்...

போட்டியின் மிடில் ஓவர்கள்தான் நாளைய போட்டியின் முக்கிய கட்டமாகும். இதில் இங்கிலாந்து அணி பந்துவீச்சில் ஆடில் ரஷித், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வீரர்கள் ஆவார்கள். இதில் இடது கை வீரர்கள் இருக்கும்போது ஆஃப் ஸ்பின்னர் மொயின் அலி வரவும் வாய்ப்புள்ளது. எனவே, ரிஷப் பண்ட், சிவம் தூபே ஆகியோர் களத்தில் இருக்கும் போது மொயின் அலி வந்தால் இந்திய வலதுகை பேட்டர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு ரன்களை சேர்க்க வேண்டும். மேலும் இங்கிலாந்து அணியிடம் பவர்பிளேவில் வீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை எனலாம். ரிஷப் பண்ட் பவர்பிளேவில் வந்தால் மொயின் அலி வர வாய்ப்புள்ளது. 

அப்படி இல்லாதபட்சத்தில் பெரும்பாலான ஓவர்கள் ஆர்ச்சர், சாம் கரன் வீசவே வாய்ப்புள்ளது. ஜார்டனுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம். எனவே, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவிடம் மேற்கொண்ட அதே அச்சமற்ற அணுகுமுறையை தொடர்ந்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிட்டும். விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினால் டபுள் பலன் கிடைக்கும்.

இறுதிப்போட்டிக்கு இந்த அணியே செல்லும்...

அதே நேரத்தில், இந்திய அணி பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோரோடு அக்சர் படேலுக்கும் 2 ஓவர்களை ஒதுக்க வேண்டும். இந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அஹைல் ஹுசைன் பவர்பிளே ஓவர்களில் சுழற்பந்துவீச்சில் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோன்று அக்சர் நாளை பவர்பிளேவில் செயல்பட வேண்டும். 

குறிப்பாக, ஜாஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்த அக்சர் படேலுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் பவர்பிளேவுக்கு பின் குல்தீப், ஜடேஜா ஆகியோருடன் அக்சரின் மீதி ஓவர்களை வீசலாம். டெத் ஓவர்களில் பும்ரா, அர்ஷ்தீப் உடன் ஹர்திக்கின் ஆப்ஷனும் இந்திய அணிக்கு கிடைக்கும். எனவே, நாளைய போட்டியில் எந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கிறார்களோ அந்த அணியே இறுதிப்போட்டிக்குச் செல்லும் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். குறிப்பாக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் ஸ்பெல் நன்றாக அமைந்தாலே போதுமானது. 

மேலும் படிக்க | IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News