India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஆம், டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதில் இருந்து இந்திய அணியின் நல்ல காலம் தொடங்கிவிட்டதாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டிருப்பதால் அதனால் இந்திய அணியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள், அடுத்தாண்டில் வர உள்ள ஐசிசி சாம்பியன் டிராபி (ICC Champions Trophy 2025) மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (ICC World Test Championship 2025) இறுதிப்போட்டி என அடுக்கடுக்காக காரணத்தை கூறுகின்றனர், இந்திய அணி ரசிகர்கள்.


ரோஹித் - கம்பீர் ஜோடி


கம்பீர் வருகை ஓகே... அடுத்தாண்டு ஐசிசி கோப்பைகள் வருவது எப்படி இந்திய அணிக்கு (Team India) பொற்காலமாக மாறும் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது, ரோஹித் சர்மாவின் தலைமையிலும், கௌதம் கம்பீரின் (Gautam Gambhir) பயிற்சியின் கீழும் இந்திய அணி அடுத்து இந்த இரண்டு ஐசிசி கோப்பைகளையும் வெல்ல இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நம்பிக்கையில் தவறுமில்லை, பிரச்னையும் இல்லை. ஏனென்றால், அதற்கு தகுதியான ஒரு அணியாகவே இந்திய அணி உள்ளது.


மேலும் படிக்க | கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!


ஒருநாள் போட்டிகளில் எடுத்துக்கொண்டாலும் சரி, டெஸ்ட் அரங்கிலும் சரி உலகத் தர பேட்டிங் வரிசையும், பௌலிங் வரிசையையும் இந்திய அணி வைத்திருக்கிறது. அதுபோக, சிறப்பான தரமான இளம் வீரர்கள் பேக்அப்பிற்கும் உள்ளனர். கௌதம் கம்பீரின் மூலமாக இந்திய அணியில் புதிய புதிய திறமைகள் களமிறக்கப்பட்டு, புத்துயிர் பாயும் எனவும் கூறலாம். 


முதல் டார்கெட்


அந்த வகையில், ரோஹித் சர்மா - கௌதம் கம்பீர் இணையின் முதல் டார்கெட் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான். மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் பிரிவிலும்; ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இரண்டாவது பிரிவிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இலங்கை அணி தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒவ்வொரு அணியும் அடுத்து இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்த தொடரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி மட்டும் பாகிஸ்தான் செல்லுமா, செல்லாதா என்ற கேள்வி தற்போதும் நீடிக்கிறது. இதுகுறித்து ஐசிசி உடன் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது.


மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் அடுத்த 2 கோப்பைகளுக்கான மிஷனை ஒப்படைத்த ஜெய்ஷா


இந்திய அணியின் போட்டிகள்...


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரை விளையாட பாகிஸ்தானுக்கு செல்லாது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டி எப்படி பாகிஸ்தானில் நடைபெற்ற போது, இந்திய அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியதோ அதைபோலவே இப்போதும் இந்திய அணி மட்டும் வேறு நாட்டில் விளையாடும் என கூறப்படுகிறது. 


அதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இந்திய அணி மட்டும் தனது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பெயர் தெரிவிக்காத ஒரு பிசிசிஐ பிரமுகர் ஊடகத்திடம் கூறுகையில்,"சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. எனவே, இந்திய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்" என்றார். ஒருவேளை இந்திய அணியின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொண்டால், இந்திய அணி மற்ற அணிகளை போல் இல்லாமல் பெரியளவில் பயணிக்க வேண்டாம். இது இந்திய அணிக்கே அதிக சாதகம் ஆகும்.


8 அணிகள் கொண்ட இந்த சாம்பியன்ஸ் தொடர் பிப். 19ஆம் தேதியில் இருந்து மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி 2008ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வது இல்லை. இரு அணிகளும் கடைசியாக இருதரப்பு போட்டி விளையாடியது என்றால் அது 2012-13 காலகட்டத்தில்தான், அதுவும் இந்தியாவில்... அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது. 


மேலும் படிக்க | இந்தி தெரியாததால் இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லையா...? நடராஜன் பேசியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ