மும்பை அணிக்கு முதல் வெற்றி... அந்த ஒரே ஒரு ஓவர் - நோர்க்கியாவால் தோற்றது டெல்லி
IPL 2024 MI vs DC: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
IPL 2024 MI vs DC Highlights: இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் மிட்செல் மார்ஷிற்கு பதில் ரிச்சடர்சன் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சுமித் குமாருக்கு பதில் லலித் யாதவ் இன்று விளையாடினார்.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கிலும் மும்பை அணி அதிரடியாகவே தொடங்கியது. பவர்பிளேவில் அந்த அணி 78 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடி வந்த நிலையில், 49 ரன்களில் அக்சர் படேலிடம் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 2ஆம் பந்திலேயே டக் அவுட்டானார். இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடினாலும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மாவும் 6 ரன்களில் வீழ்ந்தார்.
கடைசி ஓவரில் 32 ரன்கள்
மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் ஆறுதல் அளித்தனர். பாண்டியா ஆட்டமிழந்தாலும் டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினர். நோர்க்கியா வீசிய 18ஆவது ஓவரை டிம் டேவிட் வெளுத்தெடுக்க, 20ஆவது ஓவரில் ஷெப்பர்ட் 32 ரன்களை எடுத்து டெல்லியை கதிகலங்க வைத்தார். இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களை எடுத்தது. வான்கடேவில் மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 39 ரன்களை எடுத்திருந்தார். டெல்லி அணி பந்துவீச்சில் நோர்க்கியா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கலீல் அகமது 1 விக்கெட்டை வீழ்த்தினார். நோர்க்கியா 4 ஓவர்களில் மொத்தம் 65 ரன்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 235 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.
ஸ்டப்ஸ் அதிரடி
ஆனால், அந்த அணிக்கு சரியான தொடக்க கிடைக்கவில்லை. டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பிருத்வி ஷா, அபிஷேக் பொரேல் ஆகியோர் டெல்லிக்கு ஆறுதல் அளித்தனர். 88 ரன்களுக்கு இந்த ஜோடி பார்னர்ஷிப் அமைத்த நிலையில், பிருத்வி ஷா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஸ்டப்ஸ் மும்பை அணியை வெளுத்து வாங்கினார். பும்ராவை தவிர அனைத்து பந்துவீச்சாளர்கள் அடிவாங்கினர். ஆனால், மறுமுனையில் பொரேல் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க டெல்லியின் நம்பிக்கை குறைய தொடங்கியது. ரிஷப் பண்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், ஸ்டப்ஸ் மட்டும் நிலைத்து நின்று அதிரடி காட்டி அரைசதம் கடந்தார். 19ஆவது ஓவரில் அக்சர் படேல் ரன்அவுட்டானர். கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் பேட்டிங்கே பிடிக்கவில்லை. லலித் யாதவ், குமார் குஷாக்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரிச்சர்டன் கடைசி பந்தில் ஆட்டமிழக்க மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே டெல்லி எடுத்தது.
அந்த ஒரே ஒரு ஓவர்
அதன்மூலம், மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 71 ரன்களை அடித்தார். மும்பை பந்துவீச்சில் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷெப்பர்ட் 1 விக்கெட்டையும் எடுத்தனர். மும்பை அணி பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. ஒருவேளை நோர்க்கியா சற்று சிறப்பாக வீசியிருந்தால் காட்சிகள் மாறியிருக்கலாம். மேலும், கடைசி ஓவரில் அதிரடி காட்டி வந்த ஸ்டப்ஸ் ஸ்ட்ரைக்கிற்கே வராதது பெரிய தவறு. இது அவர்களின் நெட் ரன்ரேட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | IPL 2024: கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் சவால்கள் இவைதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ