Nepal T20 Records: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றாலும், இந்தியர்களின் முழு கவனமும் கிரிக்கெட்டின் மீது தான் அதிக இருக்கிறது. ஏனென்றால், முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த நிலையில், இந்திய ஆடவர் அணி மீதும் தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே நாளில் உச்சம் பெற்ற நேபாளம்


ஆசிய விளையாட்டு போட்டிகள் டி20 வடிவில் நடத்தப்படுகின்றன. ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், தற்போது அனைவரின் கவனமும் நேபாள அணியின் மீது திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் சர்வதேச டி20 அரங்கில் பல்வேறு சாதனைகளை தகர்த்து, தங்களின் பெயரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது எனலாம். 


டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள், அதிவேக அரைசதம், அதிவேக சதம் என ஒரே போட்டியில் டி20 வடிவத்தின் சாதனை பட்டியல்களில் தஙகள் பெயரை பதிவு செய்துவிட்டது, நேபாள அணி. இன்று என்னென்ன சாதனைகள் படைக்கப்பட்டன, எந்தெந்த சாதனைகள் வீழ்த்தப்பட்டன என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம். 


குவிக்கப்பட்ட சாதனைகள்


ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலிய அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 314 ரன்களை குவித்துள்ளது. இதுதான் ஒரு இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன், 2019 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது.


மேலும் படிக்க | ஒரு ஆண்டில் 5 சதங்களை அடித்த இந்திய வீரர்கள் யார் யார்...? - முழு லிஸ்ட்


அதுமட்டுமின்றி, ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையையும் நேபாளம் படைத்துள்ளது. மங்கோலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 26 சிக்ஸர்களை அந்த அணி விளாசியுள்ளது. இதற்கு முன் 2019இல் அயர்லாந்து எதிராக 278 ரன்களை ஆப்கானிஸ்தான் பதிவு செய்தபோது 22 சிக்ஸர்களை அந்த இன்னிங்ஸில் அடித்திருந்தது. தற்போது இந்த சாதனையையும் நேபாளம் தகர்த்தது. 


அதிவேக அரைசதம் 


ஆனால், இவை எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு இன்னும் இரண்டு அசத்தலான சாதனைகளை நேபாள அணியின் இரண்டு பேட்டர்கள் இன்று செய்துள்ளனர். அந்த அணியின் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைசதம் அடித்து, 12 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங்கின் நீண்ட கால சாதனையை இன்று தகர்த்தார். யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவட் பிராட் ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை அடித்த அதே போட்டியில் தான் அந்த 12 பந்துகளில் அரைசதமும் அடித்திருந்தார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனை இன்று தகர்ந்தது. 


அதிவேக சதம் 


மொத்தம் 10 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்களை தீபேந்திர சிங் ஐரி இன்றைய போட்டியில் எடுத்தார். மேலும் மற்றொரு சாதனையாக நேபாள அணியின் நம்பர் 3 பேட்டர் குஷால் மலாலா ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனைகளான டி20 போட்டிகளில் அதிவேக சதத்தை இன்று தனதாக்கிக் கொண்டார். குஷால் மலாலா வெறும் 34 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினால் ஒட்டுமொத்தமாக அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 137 ரன்களை எடுத்துள்ளார். ரோஹித் மற்றும் மில்லர் ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.


அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


நேபாள அணி முதலில் பேட்டிங் செய்து 314 ரன்களை குவித்த நிலையில், மங்கோலிய அணி 13.1 ஓவர்களில் 41 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. மேலும், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் நேபாளம் இன்று படைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Asian Games: கிரிக்கெட்டில் தங்கம்... இந்திய மகளிர் அணியின் அசத்தல் சாதனை - பதக்கப்பட்டியல் இதோ!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ