GT vs SRH: வலிமையான ஹைதராபாத்தை வீழ்த்திய குஜராத்... SRH செய்த தவறுகள் என்னென்ன?
GT vs SRH Match Highlights: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
GT vs SRH Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மாலை போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவர் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவில்லை. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதில் தர்ஷன் நல்கண்டே மற்றும் நூர் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
கிளாசென் கிளீன் போல்ட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 277 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்து சாதனைப்படைத்தது. ஆனால், அகமதாபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பெரியளவில் சோபிக்கவில்லை. ஹெட் வழக்கம்போல் அதிரடியாக தொடங்கினாலும், மயங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சற்றே சுணக்கம் காட்டினார்.
மயாங்க் அகர்வால் பவரபிளேவிலேயே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட்டை நூர் அகமது 7ஆவது ஓவரில் விக்கெட் எடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் 29 ரன்களில் மோகித் சர்மாவின் ஸ்லோயர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க ஹைதராபாத் ரன் குவிப்பதில் சற்று திணற தொடங்கியது. கிளாசென் நூர் அகமது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டபோது, இனிமேல் கிளாசென் ஆட்டத்தையே மாற்றிவிடுவார் என எண்ணினர். ஆனால், 14ஆவது ஓவரில் ரஷித் கான் உள்ளே வந்து கிளாசெனை கிளீன் போல்டாக்கினார்.
பேட்டிங்கில் இருக்கும் பிரச்னை
அதன்பின்னர், அப்துல் சமத் எந்த பிரச்னையும் இன்றி ரன்களை குவித்து வந்தாலும் அவருக்கு பக்கபலமாக கடைசிகட்ட ஓவர்களில் யாருமே கைக்கொடுக்கவில்லை. மார்க்ரம், ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சொதப்ப கடைசி கட்ட ஓவர்களில் ரன்களே வரவில்லை. இதனால், 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே ஹைதராபாத் குவித்தது. அதாவது, சூழலுக்கு ஏற்ப ஆடாமல் கடந்த போட்டியை போலவே அதிரடியாக விளையாட வேண்டும் என நோக்கில் ஹைதராபாத் அணி முக்கிய கட்டத்தில் பல விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
இது அவர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. குஜராத் பந்துவீச்சில் மோகித் சர்மாவின் கடைசி ஓவரை குறிப்பிட்டே ஆக வேண்டும், அவர் கடைசி ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். மொத்தமாக குஜராத் பந்துவீச்சில் மோகித் 3 விக்கெட்டுகளையும், ஓமர்ஸாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
163 ரன்கள் என்ற இலக்கை குஜராத் நிதானமாக தொடங்கியது. விருத்திமான் சாஹா 25 ரன்களை எடுத்து பவர்பிளேவிலேயே கிளம்பினாலும், கேப்டன் சுப்மான் கில், சாய் சுதர்சன் மிடில் ஓவர்களில் நிதானம் காட்டினர். இந்த ஜோடியை மயங்க் மார்க்கண்டே பிரித்த நிலையில், சாய் சுதர்சனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை குஜராத் பக்கம் தக்க சமயத்தில் கொண்டு வந்தார். சாய் சுதர்சன் 45 ரன்களில் ஆட்டமிழக்க, விஜய் சங்கர் வந்து டேவிட் மில்லருக்கு துணை நின்றார்.
நடராஜன் இல்லாதது பின்னடைவு...
இதன்மூலம், 19.1 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பதிவு செய்தது. மில்லர் 44 ரன்களுடனும், விஜய் சங்கர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் பந்துவீச்சு இன்றும் மிக சுமாராகவே இருந்தது. நடராஜன் இல்லாதது டெத் ஓவர்களில் அவர்களுக்கு பெரிய பின்னடைவு.
தக்க சமயத்தில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்காததும் பிரச்னையாக அமைந்தது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சில பிரச்னைகளை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது அடுத்த போட்டியில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி சிஎஸ்கே உடன் தனது சொந்த மண்ணான ஹைதராபாத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மயங்க் யாதவின் ஜெட்வேக பந்துவீச்சு! சிஎஸ்கே தவறவிட்ட தங்கம் லக்னோவில் ஜொலிக்குது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ