Pakistan vs Bangladesh Test Series: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 சுழற்சியின் இறுதிப்போட்டி அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து பல அணிகளுக்கான டெஸ்ட் சீசன் இப்போதே தொடங்கிவிட்டது எனலாம். 

 

தென்னாப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துவிட்டது. இலங்கை அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்தியா அதன் டெஸ்ட் சீசனை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது. 

 

பாகிஸ்தான் படுதோல்வி

 

வங்கதேச அணியுடன் 2 போட்டிகள், நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் என 5 டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடிவிட்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது. செப்டம்பரில் தொடங்கும் இந்தியாவின் டெஸ்ட் சீசன் ஜனவரி வரை நீள்கிறது எனலாம். இந்த 10 போட்டிகளையும் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். 

 


 

அதேபோல் மற்ற நாடுகள் மோதும் டெஸ்ட் போட்டியை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் கிரிக்கெட் உலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் ராவில்பின்டி நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல்முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் அரங்கில் வங்கதேச அணி வீழ்த்தியிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

 

ரமீஸ் ராஜா தாக்கு

 

மொத்தமே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் வங்கதேச அணி ஏறத்தாழ தொடரை கைப்பற்றிவிட்டது எனலாம். அடுத்த போட்டியை டிரா செய்தாலே கோப்பை வங்கதேசத்திற்குதான். இருப்பினும், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானின் இந்த தோல்வி அவர்கள் நாட்டிலேயே பல விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. வழக்கம்போல், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் தற்போதைய வீரர்களை கடுமையாக சாடி வருகின்றனர். 

 

அதிலும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா வங்கதேசத்திற்கு எதிரான தோல்விக்கு கடுமையாக சாடியுள்ளார். அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியபோது,"எந்த அணியாவது வெற்றியின் வாசல் வரை வந்தபின்னர், தோல்வி அடைய முடியும் என்றால் அது பாகிஸ்தான் அணியாக தான் இருக்கும், அதுவே அவர்களுக்கு ஒரு வழக்கமாகவும் ஆகிவிட்டது" என்றார். 

 

இது முதல் முறை அல்ல...

 

மேலும் அவர் அந்த வீடியோவில்,"ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், பாகிஸ்தான் அதன் செயல்திறன் வீழ்ச்சியடைந்து நொறுங்குவது இது முதல் முறை அல்ல. சில சமயங்களில் பேட்டிங் சொதப்புகிறது, சில முக்கியமான தருணங்களில் பந்துவீச்சு தடுமாறுகிறது" என்றார். 

 

2018இல் துபாயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலை பெறும். அதன்பின் நான்காவது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மொத்தமாக சரிந்து 175 ரன்கள் இலக்கை தொட முடியாமல் ஆல்-அவுட்டானது. அந்த போட்டியில் 171 ரன்களை மட்டும் அடித்து பாகிஸ்தான் தோற்றது. இந்த போட்டியைதான் ரமீஸ் ராஜா நினைவுக்கூர்ந்தார். 

 

வெளிச்சம் போட்டு காட்டிய இந்தியா

 

மேலும், ரமீஸ் ராஜா தான் பாகிஸ்தான் தோல்விக்கு பின்னர், இந்திய அணி இருப்பது குறித்து பேசினார். அதில்,"இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் (ஆசியா கோப்பை ஒருநாள் போட்டி - 2023) தொடங்கியது, அங்கு நமது வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தப்பட்டனர். 

 

நீங்கள் அவர்களை (பாகிஸ்தான் பௌலர்கள்) அடித்து ஆடினால் அல்லது கொஞ்சம் ஆக்ரோஷத்தைக் காட்டினால், இந்த பந்துவீச்சு தாக்குதல், சொல்லிக்கொள்வது போல் சிறப்பாக இருக்காது என்பதை உலகம் முழுவதும் அன்று கவனித்தது. ஏனெனில் அனைவரின் வேகமும் சீர்குலைந்தது, விக்கெட் எடுக்கும் திறனே வெளிப்படாமல் போய்விட்டது" என்றார். 

 

வங்கதேசம் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானில் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது என்றும இது ஒரு சிறந்த செயல்திறன் என்றும் வங்கதேச அணிக்கு தனது பாராட்டுக்களையும் ரமீஸ் ராஜா தெரிவித்தார். 

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ