KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!
KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
KKR vs RCB Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் லீக் சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் டாஸை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், ஆர்சிபி அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. கேம்ரூன் கிரீன், சிராஜ், கரன் சர்மா ஆகியோர் இன்று விளையாடினர்.
சால்ட் மிரட்டல்
கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் சுனில் நைரன் - பில் சால்ட் ஆகியோரின் சிறப்பான தொடக்கமே இத்தனை வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில், இன்று சுனில் நரைன் பெரியளவில் ரன்களை குவிக்காவிட்டாலும் மறுமுனையில் சால்ட் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக, பெர்குசனின் ஓவரில் சால்ட் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 28 ரன்களை குவித்தார்.
மேலும் படிக்க | இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!
இருப்பினும் சிராஜ் வீசிய 5வது ஓவரில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களுடன் ஆட்டமிழந்தார். யாஷ் தயாள் வீசிய 6வது ஓவரில் சுனில் நரைனும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில், ரகுவன்ஷியும் கேம்ரூன் கிரீனின் அபாரமான கேட்சால் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
கடைசி ஓவர்களில் கசிந்த ரன்கள்
பவர்பிளேவுக்கு பின்னரும் ஷ்ரேயாஸ் ஐயர் - வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். வெங்கடேஷ் ஐயர் 8 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரின்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து சிறிய கேமியோ ஆடினார். கேப்டன் ஷ்ரேயாஸ் மட்டும் தொடர்ந்து நிலையாக விளையாடி வந்தார்.
ஷ்ரேயாஸ் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரஸ்ஸல் மற்றும் ரமன்தீப் சிங் சேர்ந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட 20 ஓவர்களில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்தது. ரஸ்ஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும் குவித்தனர். இது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் யாஷ் தயாள் மற்றும் கேம்ரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சொதப்பிய விராட் - டூ பிளெசிஸ்
223 ரன்கள் என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. விராட் கோலி நல்ல ஃபார்மில் இருந்தாலும் 3வது ஓவரில் ஹர்ஷித் ராணாவின் ஸ்லோ புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 18 ரன்களை குவித்திருந்தார். அவரை தொடர்ந்து நான்காவது ஓவரில் பாப் டூ பிளெசிஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், வில் ஜாக்ஸ் - பட்டிதார் ஜோடி சிறப்பாக விளையாடி பவர்பிளேவிலேயே 74 ரன்களை குவிக்க உதவினர்.
2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள்...
இந்த ஜோடி கேகேஆர் அணியின் பலமான சுழற்பந்துவீச்சாளர்களை போட்டு நொறுக்கியது. இரு வீரர்களும் அரைசதத்தை பதிவு செய்தனர். அந்த நிலையில், கேகேஆர் அணி 12வது ஓவரில் ரஸ்ஸலை பந்துவீச அழைத்தது. இது கேகேஆர் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நன்றாக செட் ஆகியிருந்த வில் ஜோக்ஸ் மற்றும் கரன் சர்மா ஆகிய இருவரும் அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். அதேபோல், நரைன் வீசிய 13வது ஓவரில் கிரீன் மற்றும் லோம்ரோட் இருவரும் ஆட்டமிழக்க ஆர்சிபி தடுமாற தொடங்கியது.
இருப்பினும், சுயாஷ் பிரபுதேஷாய் - தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இருப்பினும், 18வது ஓவரில் பிரபுதேஷாய் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தை முடித்துவைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் எக்கச்சக்க ட்விஸ்ட்
இதனால், கடைசி ஓவருக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் கரன் சர்மா 3 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். இதனால் வெற்றிக்கு 2 பந்துகளில் 3 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், 5வது பந்தில் கரன் சர்மா ஸ்டார்க்கிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க மீண்டும் பதற்றம் அதிகமானது. கடைசி பந்தை பெர்குசன் எதிர்கொண்டார். அவர் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சிக்க, இரண்டாவது ரன் ஓடும்போது ரன்அவுட்டானார்.
இதனால் ஆர்சிபி 1 ரன்னில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், தொடரில் இருந்து ஏறத்தாழ அந்த அணி வெளியேறிவிட்டது எனலாம். ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
மேலும் படிக்க | IPL 2024: கோடி கோடியாக கொடுத்தும் பயனில்லாமல் போன 10 வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ