ஹர்திக் பாண்டியா வரமாட்டாரா...? அப்போ இன்னும் இந்த வீரருக்கு வாய்ப்பிருக்கு! - இந்த முறை மிஸ் ஆகாது!
Indian Cricket Team: உலகக் கோப்பையின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி சமபலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வீழ்த்திய பின் தற்போது ஒரு சிறிய ஓய்வில் உள்ளது. கடந்த 22ஆம் தேதி நியூசிலாந்து போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியாவின் அடுத்த போட்டி வரும் 29ஆம் தேதிதான் உள்ளது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் அந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை இந்திய அணி (IND vs ENG) எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனை வீழ்த்துமா இந்தியா?
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வஙகதேசம், நியூசிலாந்து அணிகளை வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் என்றாலும் இங்கிலாந்து அணி நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா என மூன்று அணிகளிடம் தோற்று, வங்கதேசத்தை மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை இலங்கை அணியுடன் மோத உள்ளது.
இங்கிலாந்தின் தற்போதைய ஃபார்மை பார்க்கும்போது, முரட்டு ஃபார்மில் இருக்கும் இந்தியா அதை எளிதாக வென்றுவிடும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில், கிரிக்கெட்டில் போட்டி தினத்தில் நடக்கும் விஷயங்களே வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் இரு அணிகளும் சிரத்தையாக இந்த போட்டியை எதிர்கொள்ளும் என்பதை நம்பலாம்.
மேலும் படிக்க | பாண்டியா வந்தாலும் இவரை விட்டுறாதீங்க... உலகக் கோப்பையை வெல்ல அவர் ரொம்ப முக்கியம்!
ஹர்திக் பாண்டியா ஹெல்த் அப்டேட்
அந்த வகையில், இந்திய அணியில் காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இங்கிலாந்து போட்டிக்கு வந்துவிடுவாரா என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. வங்கதேச அணியுடனான போட்டியில் காலில் அவருக்கு காயம் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியிலேயே விளையாடவில்லை.
அவருக்கு ஸ்கேன் செய்ததில் காலில் சுளுக்குதான் என்றும் தீவிரமான காயமில்லை என்றும் முதற்கட்ட தகவல் தெரிவித்தது. அவர் அணியுடன் தரம்சாலா செல்லாமல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் வல்லுநர்களின் கண்காணிப்பில் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். குறிப்பாக, அவருக்கு லண்டனில் இருந்து வரவைக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விளையாட வாய்ப்பில்லை
நியூசிலாந்து, இங்கிலாந்து போட்டிக்கும் இடையில் சுமார் ஒரு வாரம் இடைவேளை இருந்ததால் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமாகி அணியுடன் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ தரப்பில் இருந்து தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணியின் (Team India) வெற்றிப் பயணத்தால் குஷியில் இருக்கும் ரசிகர்களுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தலாம்.
ஹர்திக் பாண்டியாவின் காயம் (Hardik Pandya Injury Status) குறித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவலில், "லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியை ஹர்திக் பாண்டியா தவறவிட வாய்ப்புள்ளது. இந்த கட்டத்தில் இது ஒரு முன்னெச்சரிக்கை தான். தீவிரமான பிரச்னை என ஒன்றும் இல்லை" என்றார்.
பாண்டியாவுக்கு பதில் 2 பேர்...
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். பேட்டிங்கில் நம்பர் 6இல் இறங்கி இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடவல்லவர். மேலும், இந்திய அணியின் 6ஆவது பந்துவீச்சாளரும் அவர்தான். இவர் 5-6 ஓவர்கள் வீசுவதால், 8ஆவது இடத்தில் ப்ரீமியம் வேகப்பந்துவீச்சாளருக்கு பதில் ஒரு ஆல்-ரவுண்டரை (அஸ்வின்/ஷர்துல்) இந்திய நிர்வாகம் களமிறக்கி வந்தது.
மேலும் ஒரு வாய்ப்பு...
கடந்த நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக பேட்டிங்கில் அவர் இடத்தில் (Hardik Pandya Replacement) சூர்யகுமார் யாதவ் கொண்டு வரப்பட்டார். பந்துவீச்சில் முழுமையாக 10 ஓவர்களை நன்றாக வீசியாக வேண்டும் என்பதால் ஷர்துல் தாக்கூருக்கு பதில் ப்ரீமியம் பந்துவீச்சாளரான முகமது ஷமியை (Mohammed Shami) இந்திய அணி எடுத்தது. இதில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
அதன்மூலம், அவரது இடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டார். ஆனால், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) துரதிருஷ்டவசமாக ரன்அவுட்டானார். தற்போது, ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து போட்டியிலும் விளையாடவில்லை என்றால் சூர்யகுமாருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது அவருக்கு ஆறுதல் அளிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ