Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என முதல் ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது. சொந்த மண்ணில் நடப்பது கூடுதல் நன்மையை வழங்கினாலும், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இந்தியா தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
15 பேரும் விளையாடிவிட்டனர்
மேலும் தொடர் தொடங்கிய போதே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஓப்பனரும், நட்சத்திர வீரருமான சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால், முதலிரண்டு போட்டிகளில் அவருக்கு பதில் இஷான் கிஷன் ஓப்பனிங்கில் விளையாடினார். மேலும், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் விளையாடினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கில் அணிக்குள் வர இஷான் கிஷன் வெளியே அமரவைக்கப்பட்டார். தொடர்ந்து, நான்காவது போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் (Hardik Pandya Injury) ஏற்பட்டது. இதனால், நேற்றைய நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா இடத்தில் சூர்யகுமார் யாதவும், ஷர்துல் தாக்கூருக்கு பதில் முகமது ஷமியும் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம், விளையாடிய 5 போட்டிகளில் இந்திய அணியின் 15 வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு போட்டியை விளையாடிவிட்டனர். இங்கிலாந்து அணியிலும் அவர்களின் 15 வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடிவிட்டனர் குறிப்பிடத்தக்கது.
மிரட்டிய ஷமி
இதில், இத்தனை ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது ஷமி (Mohammed Shami) முதல் நான்கு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படாதது பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஷர்துல் தாக்கூருக்கு (Shardul Thakur) பதில் ஷமியை அணியில் எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், இந்தியா ஹர்திக் பாண்டியா இல்லாததால் முழுமையாக 10 ஓவர்கள் வீச வேண்டும் என்பதற்காக நேற்றைய போட்டியில் ஷமியை அணிக்குள் கொண்டு வந்தது. அவர் நேற்றைய போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது மட்டுமின்றி மொத்தம் 5 விக்கெட்டைகள வீழ்த்தி மிரட்டினார்.
ஏன் ஷமி வேண்டும்?
இந்நிலையில், ஷமியை அணியில் வைத்திருக்க வேண்டும் எனவும் பாண்டியா உள்ளே வந்தாலும் 8ஆவது இடத்தில் ஷமிதான் விளையாட வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் (Harbajan Singh) கருத்து தெரிவித்துள்ளார். ஷமி குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது,"அவர் ஒரு கம்ப்யூட்டர். பந்தை எங்கு பிட்ச் செய்ய என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் இந்த வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னை நிரூபித்த வீரர். அவரை எப்படி அணியில் வெளியே வைக்கிறார்கள் என்று நான் யோசிக்கிறேன்.
ஒரு அணி தனது வீரரை இரண்டு ஓவர்கள் வீச வைத்து, கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால், அது சரியான அணியாக இல்லை என்று நான் உணர்கிறேன். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அணி சரியாக இருந்தது. ஹர்திக் பாண்டியா மீண்டும் வரும்போது, அவர் நம்பர் 6இல் பேட்டிங் செய்வார், ஆனால் ஷமி நம்பர் 8இல் நீடிக்க வேண்டும். உங்களுக்கு நம்பர் 8இல் பேட்டிங் மற்றும் ஒரு சிறிய பந்துவீச்சு தேவைப்படும் போது, நீங்கள் முகமது ஷமியை தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அவர் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங் பொறுப்பை பேட்டர்களும், பந்துவீச்சு பொறுப்பை பந்துவீச்சாளர்களும் ஏற்கும் அணிதான் ஒரு நல்ல அணி. ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசுவதற்கு ஒருவர் எப்போதாவதுதான் தேவைப்படுவார்" என்றார்.
மேலும் படிக்க | சுயநலவாதியா விராட் கோலி... சூர்யகுமார் ரன் அவுட்டுக்கு யார் காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ