ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்தன. உலக சாம்பியனான இங்கிலாந்து உள்ளூரில் மூன்று இலக்கத்தை கூட எட்டாமல் முடங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


இதனைத்தொடர்ந்து 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 



முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதத்தோடு அதிகபட்ச ரன்களை பதிவு செய்த மார்னஸ் லபுஸ்சேன் 80 ரன்களில் ரன்-அவுட் ஆனார். முன்னதாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து, லபுஸ்சேனின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த லபுஸ்சேன் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, பென் ஸ்டோக்ஸ் இறுதி வரை நின்று விளையாடி 135(219) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஜோ ரூட் 77(205) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.


ஆட்டத்தின் 125.4-வது பந்தில் 9 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.