ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது சாத்தியமில்லை ஒரு வருடம் ஒத்தி வைப்பு: ஐ.ஓ.சி அறிவிப்பு
உலகம் முழுவதும் பரவும் கொரோனோ வைரஸ் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவது என்பது சாத்தியமற்றது என ஐ.ஓ.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் (Tokyo Olympics) அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இது தவிர்க்க முடியாதது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (International Olympic Committee) அதிகாரி டிக் பவுண்ட் தெரிவித்தார். ஒலிம்பிக் திட்டமிட்டபடி இந்த ஆண்டு தொடங்காது என்றும் கூறினார்.
"முன்னோக்கி செல்ல தீர்மானிக்கப்பட வில்லை. அதனால் ஜூலை 24 அன்று தொடங்கப் போவதில்லை. அது எனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.
ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தலைவிதி குறித்து தனது இறுதி முடிவை அறிவிப்பதாக ஐ.ஓ.சி (IOC ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், விளையாட்டு ரத்து செய்யப்படுவதை நிராகரித்த ஐ.ஓ.சி, இப்போது போட்டிகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
முதலில் ஜூலை 24 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நீண்டகால உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள், தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.