புது டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டப்படும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்திருந்ததால்  அவரது நினைவாக அருண் ஜெட்லி மைதானம் என பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது இளமை காளத்தில் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேவேளையில் கேலரி ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது. 
இந்த விழாவானது ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் எனவும், இந்த நிகழ்வின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக ஜெட்லி இருந்தார் என்பதையும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிந்த காலத்தில் அரங்கத்தை புதுப்பிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெட்லி எடுத்த நடவடிக்கைகள், அதிக ரசிகர்களை தங்க வைக்கும் வகையில் அரங்கத்தின் திறனை அதிகரிக்க வழிவகுத்தது. இந்த அரங்கத்தில் உலகத் தரம் வாய்ந்த ஆடை அறைகளை நிர்மாணித்த பெருமையையும் ஜெட்லியையே சேரும்.


இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா தெரிவிக்கையில், விராட் கோலி, வீரேந்தர் சேவாக், கவுத்தம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, ரிஷாப் பந்த் மற்றும் பலர் சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த காரணம் ஜேட்லியின் ஆதரவும் ஊக்கமும் தான் என குறிப்பிட்டார்.


அரங்கத்தை தனது பதவி காலத்தில் மீண்டும் உயிர்பித்த நபரின் பெயரை, அவர் சென்ற பின் அந்த அரங்கத்திற்கு வைப்பது, அவருக்கும் அளிக்கும் பெருமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.