குடும்ப கஷ்டம்... தந்தையின் தியாகம் - நிதிஷ்குமார் ரெட்டி கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டது எப்படி?
Nitish Kumar Reddy: பின்தங்கிய பொருளாதாரத்தில் இருந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரியளவில் உதவியாக இருந்தது என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Nitish Kumar Reddy Latest News Updates: இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்பது பலரும் சொல்லக்கூடிய ஒன்றாகும். அந்தளவிற்கு கிரிக்கெட்டை கொண்டாடக்கூடிய, கிரிக்கெட் வீரர்களை தெய்வமாக கருதக்கூடியவர்கள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகும். அப்படியிருக்க இந்தியாவில் இருந்து புதிது புதிதாக பல்வேறு நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அதில் சிலர் நீண்ட காலத்திற்கு மிளிர்வார்கள். சிலர் குறுகிய காலத்திலேயே மறைந்துவிடுவார்கள்.
அப்படியிருக்க கடந்த ஐபிஎல் சீசனின் மூலம் ஒரு சிறிய நட்சத்திரமாக உருவெடுத்த நிதிஷ் குமார் ரெட்டி, தற்போது இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார். வெறும் 21 வயதான இளம் வீரர் ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவரது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் 8ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்களை அடித்தது மட்டுமின்றி, முதல் வீரராக சதத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
நம்பிக்கை நாயகன் நிதிஷ் குமார் ரெட்டி
டி20 காலகட்டத்தில் ஒரு டி20 லீக் தொடரில் இருந்து இந்தியாவுக்கு விளையாட வந்த நிதிஷ் குமார் ரெட்டி இந்த இன்னிங்ஸில் 172 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் என 105 ரன்களை நிதிஷ் குமார் அடித்து இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய அணியை 221 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, நிதிஷ் குமார் - வாஷிங்டன் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பே சற்று காப்பாற்றியிருக்கிறது எனலாம். இந்த ஜோடி 127 ரன்களை குவித்தது. இன்னும் இந்திய அணியின் கையில் 1 விக்கெட்டே இருக்கும் நிலையில், 116 ரன்கள் பின்னடைவில் உள்ளது.
அது ஒருபுறம் இருக்க, யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி...? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 284 ரன்களை குவித்து, சராசரியை 71.00 ஆக வைத்துள்ளார். டிராவிஸ் ஹெட்டை விட இந்த தொடரில் அதிக சராசரியை வைத்திருக்கிறார் நம்பர் 8இல் இறங்கும், நிதிஷ் குமார் ரெட்டி. இந்தியாவின் 7 இன்னிங்ஸ்களில் 5இல் இவர்தான் அதிக ரன்களையும் அடித்துள்ளார். அப்படியிருக்க இவர் எங்கிருந்து தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இந்த உயரத்தை அடைந்திருக்கிறார், இவரின் வளர்ச்சிக்கு பின் இருக்கும் காரணிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க | CSK: கான்வே, ரவீந்திரா இல்லையென்றால்... சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை
நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் எம்எஸ்கே பிரசாத்தால் அடையாளம் காணப்பட்டவர். நிதிஷ் குமாரின் தந்தை முத்யாலா ரெட்டி சிறுவயதிலேயே தனது மகனை எம்எஸ்கே பிரசாத்திடம் அழைத்து வந்துள்ளார். அங்கு நிதிஷ் குமாரிடம் சில கேள்விகளை கேட்டும், வலைப்பயிற்சியில் அந்த சிறுவனின் ஷாட்டை பார்த்தும் அவருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என எம்எஸ்கே பிரசாத் முடிவெடுத்தாராம்.
எம்எஸ்கே பிரசாத் அதன்பின் ஆந்திரா கிரிக்கெட் வாரியத்திடம் நிதிஷ் குமாரை அழைத்து சென்றுள்ளார். சிறுவயதில் அங்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு உணவு, உறவிடம், கல்வி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பொருளதாராத்தில் இருந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு இது பெரும் உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக, நிதிஷ் குமாரின் தந்தை இவரின் கிரிக்கெட்டை கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையையும் தியாகம் செய்துள்ளார். ஆந்திர கிரிக்கெட் வாரியத்தின் இந்த உதவி அவரின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரும் பங்கை வகித்துள்ளது.
குடும்பத்தினரின் தியாகம்
இன்றைய சதத்திற்கு பின் எம்எஸ்கே பிரசாத் ஊடகம் ஒன்றில் பேசுகையில்,"நிதிஷ் குமார், அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாது எனக்கும் மகிழ்ச்சியான தருணங்களில் இது ஒன்றாகும். இந்த இளம் வீரரை நினைத்து ஒட்டுமொத்த நாடும் ஆந்திர கிரிக்கெட் வாரியமும் பெருமை கொள்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.
அவர் ஒரு பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர். கஷ்டங்களை தாண்டி, தடைகளை தகர்த்தெறிந்து, இப்போது அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இந்த நிலையை எட்டுவதற்கு நிதிஷ் குமார் அபாரமாக உழைத்துள்ளார். அவருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து மகத்தான தியாகங்களைச் செய்த அவரது குடும்பத்தினருக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆந்திரா கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்கு
கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியில் ஆந்திரா கிரிக்கெட் வாரியத்திற்கு முக்கிய பங்கு வகித்தது. நிதிஷின் தந்தை அவனை என்னிடம் அழைத்து வந்ததில் இருந்து, இந்த பையன் பெரிய அளவில் பெரிய சாதனைகளை செய்வான் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும் வரை ஆந்திர கிரிக்கெட் அவருக்கு மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகையாக அளித்தது. அவருடைய கிரிக்கெட் மட்டுமின்றி கல்வியையையும் அவர்களே கவனித்துக் கொண்டனர். என்னிடம் வந்தபோது அவருக்கு வயது 12. நான் அவருக்காக உண்மையிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
மேலும் படிக்க | ஜெய்ஸ்வால் ரன்அவுட்... விராட் கோலியின் தவறா? நேரலையில் சண்டைப் போட்ட மூத்த வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ