டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை புள்ளி அட்டவணையில் 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியும், 6வது இடத்தில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. 


இதனையடுத்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஆரம்ப முதலே நிதானமாக ஆடியது. எனினும் நான்கு ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர் கிறிஸ் கெய்ல் சற்று அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. அவரும் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 44.4 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டும் இழந்தது. நிக்கோலஸ் பூரன் மட்டும் 63 ரன்கள் எடுத்தார்.


213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடி காட்ட 33.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோ ரூட்* 100(94) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி மொத்தம் 6 புள்ளிகளை பெற்று உலகக் கோப்பை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 


வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டியில் விளையாடி ஒரே போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. நேற்றைய போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை, பந்துவீச்சிலும் செயல்படவில்லை.