ஃபிஃபா யு-17 உலக கோப்பை: இந்தியா, அமெரிக்கா முதல் ஆட்டம் தொடக்கம்!
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெறும்.
17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டி வரும் 28-ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, நவி மும்பை, கவுஹாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகின்றன.
இன்று இரவு 8 மணிக்கு டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
ஃபிஃபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவுக்கான உலகக் கோப்பையிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதன்முறை. இந்த போட்டியில் இந்தியாவுடன், ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி, தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
> 6 பிரிவில் இருந்தும் சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
> நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு கால் இறுதிக்கு தகுதி பெற்று விளையாடும்.
> கால் இறுதி ஆட்டங்கள் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இறுதி போட்டி அக்டோபர் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
அனைத்து போட்டியும் சோனி லைவ் ஆப் (SonyLIV App) மற்றும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த போட்டியை சோனி டென் 2 (SONY TEN 2), சோனி டென் 2 எச்டி (SONY TEN 2 HD), சோனி ஈஎஸ்பிஎன் (SONY ESPN) & சோனி ஈஎஸ்பிஎன் எச்டி (SONY ESPN HD) போன்றவை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.