முதல் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி, அஷ்வின் அசத்தல்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 161.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியத் தரப்பில் கேப்டன் விராட் கோலி 200, அஸ்வின் 113, ஷிகர் தவன் 84, அமித் மிஸ்ரா 53 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிரத்வெயிட், தேவேந்திர பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3-ஆவது நாளான சனிக்கிழமை 90.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிரத்வெயிட் 74, விக்கெட் கீப்பர் டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு பாலோ-ஆன் வழங்கியது. அதைத் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டேரன் பிராவோ 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சந்திரிகாவுடன் இணைந்தார் சாமுவேல்ஸ். நின்று நிதானமாக ஆடிய சாமுவேல்ஸ் 50 ரன்களும், கார்லோஸ் பிராத்வைட் 51 ரன்களும் எடுத்தனர். இவர்களை அடுத்து தேவேந்திர பிஷு 45 ரன்களை எடுத்தார். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். பிளாக்வூட் டக்-அவுட் ஆனார்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 78-வது ஓவரில் 231 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 92 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்திய வீரர் அஸ்வின், 25 ஓவர்கள் பந்து வீசி, வெறும் 83 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு வித்திட்டார். முதல் இன்னிங்சில் சதம் அடித்து, 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த இன்னிங்ஸ் வெற்றி ஆசியாவுக்கு வெளியே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியும் இதுவே. சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகள் என்று ஒரே டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அசத்துவது 2-வது முறையாகும்.
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற வெற்றி கணக்கில் முன்னிலையில் உள்ளது.