“தோனி நான் இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர்” – கேரி கிரிஸ்டன் புகழாரம்!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனின் நட்பு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனின் (Gary Kirsten) நட்பு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவர்களது கூட்டு முயற்சி மற்றும் செயலுத்தியின் பயனாக 2011 இல் ஐ.சி.சி உலகக் கோப்பையை (ICC World Cup) இந்திய அணி வென்றது. இருவருக்கும் இடையில் இருந்த புரிதலால், இந்திய கிரிக்கெட் அணி பல உச்சங்களைத் தொட்டது.
அண்மையில் ஒரு நேர்காணலில் தோனியைப் பற்றி பேசிய முன்னாள் தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் கேரி கிரிஸ்டன், தோனியின் விசுவாசம் அவரை தனது வாழ்க்கையில் இதுவரை சந்தித்த மிகவும் ஈர்க்கக்கூடிய நபர்களில் ஒருவராக ஆக்கியது என்று குறிப்பிட்டார்.
"நான் சந்தித்த மிகவும் ஈர்க்கக்கூடிய நபர்களில் ஒருவர் அவர். அவர் ஒரு சிறந்த மக்கள் தலைவர். அவர் அணியை மிக நல்ல முறையில் வழி நடத்தக் கூடியவர். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் அதிகமான விசுவாசமுள்ளவர்" என்று கிர்ஸ்டன் யூடியூபில் தி ஆர்.கே ஷோவில் தோனி பற்றி கூறினார்.
இந்தியாவின் நடந்த ஒரு நிகழ்வையும் திரிஸ்டன் நினைவு கூர்ந்தார். பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிரிஸ்டன் மற்றும் அவரது பயிற்சி அணியில் உள்ள இரு தென் ஆப்பிரிக்கர்கள் அனுமதிக்கப்படாததால் தோனி ஒரு நிகழ்வைத் தவிர்க்க முடிவு செய்த ஒரு சம்பவம் பற்றி கிரிஸ்டன் கூறினார்.
“நான் இதை ஒருபோதும் மறக்க மாட்டேன். உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, பெங்களூரில் (Bengaluru) விமானப் பள்ளிக்குச் (Flight School) செல்லவும், அங்கு சுற்றிப் பார்க்கவும் அழைக்கப்பட்டோம். எங்கள் பயிற்சி குழுவில் நாங்கள் இரண்டு வெளிநாட்டினரைக் கொண்டிருந்தோம். காலையில் நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் செல்லக் காத்திருந்தோம். அப்போது, நான், பேடி ஆப்டன் மற்றும் எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் வர அனுமதிக்கப்படவில்லை என செய்தி வந்தது. ஏனெனில் இது பாதுகாப்பு அபாயமாகக் கருதப்பட்டது. இதைக் கேட்ட தோனி முழு நிகழ்வையும் ரத்து செய்தார். அவர் ‘இவர்கள் எங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாவிட்டால், நாங்கள் யாரும் செல்லமாட்டோம் ’ என்று கூறினார். அவர் யார் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது” என்று கிர்ஸ்டன் கூறினார்.
ALSO READ: மிகச்சிறந்த தோழன் - நீ, தோனி!!
"அவர் என் மீது நன்மதிப்பும் விசுவாசமும் வைத்திருந்தார். ஒரு அணியாக வெற்றி தோல்வி இரண்டையும் நாங்கள் கண்டோம். பல கடினமான நேரங்களையும் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட தருணங்களில் ஒன்றாக அமர்ந்து நாங்கள் பேசி, அணியை முன்னோக்கி கொண்டு செல்ல உத்திகளை அமைப்போம். நான் அவருடன் பணியாற்றிய மூன்று ஆண்டுகளில் எங்களுக்குள் ஒரு நல்ல வலுவான உறவு உருவானது என்று நான் நினைக்கிறேன்” என்று கிரிஸ்டன் மேலும் கூறினார்.