Over Confidence-ஆல் சொதப்பிய இந்தியா! பாகிஸ்தான் அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடின. அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விளையாடுவதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் ஐசிசி நடத்தும் விளையாட்டில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை. இந்த வரலாற்றை பாகிஸ்தான் அணி மாற்றுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது.
ALSO READ தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் ரசிகர்களுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அப்ரிடியின் சிறப்பான பவுலிங்கில் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி வெளியேறினார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாய் மூன்றாவது ஓவரில் ராகுல் 3 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 11 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங் அவரேஜ் வைத்திருந்த கோலி இந்த போட்டியிலும் அதனை தொடர்ந்தார். 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் கோலி. மறுபுறம் பந்த் 30 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
கடைசியாக இறங்கிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ரன்கள் அடிக்க தவறியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய அப்ரிடி இந்திய அணியின் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் பவுலர்கள் கையிலேயே இந்த போட்டியின் வெற்றி இருந்த நிலையில் இதனை மாற்றி அமைத்தனர் பாகிஸ்தான் அணியின் ஓபனிங் வீரர்கள். இந்திய அணியின் ஒரு பவுலரை கூட விட்டு வைக்காமல் அனைவரையும் அடித்து துவம்சம் செய்தனர். 17.5 ஓவரில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இதுவரை இந்திய அணியை ஐசிசி போட்டிகளில் வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாற்றி அமைத்தது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 68 ரன்களும் அடித்தனர். இந்திய அணிக்கு 6வது பவுலர் இல்லாதது பெரிய பின்னடைவாக அமைந்தது.
ALSO READ பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR