IND vs SA: 116 ரன்களுக்கு ஆல்-அவுட்... வாரி சுருட்ட காத்திருக்கும் இந்தியா!
IND vs SA 1st ODI: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது
IND vs SA 1st ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இரு அணிகளும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்விக்கு பின் ஒருநாள் அரங்கில் மோத உள்ளன. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா அரையிறுதியிலும், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இறுதிப்போட்டியிலும் தோற்றது நினைவுக்கூரத்தக்கது.
அந்த வகையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மீது கடும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஒருநாள் அரங்கில் அறிமுகமானார். மேலும், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சஹாலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. குல்தீப் பிரதான சுழற்பந்துவீச்சாளராகவும், அக்சர் படேல் சுழற்பந்துவீச்சாளராகவும் களமிறங்கி உள்ளனர்.
போட்டியின் டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்மூலம், பந்துவீச இந்திய அணிக்கு இரண்டாவது ஓவரில் இருந்து விக்கெட் வேட்டை தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து, சோர்ஸி அதிரடி காட்டினாலும் அவரை அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுக்க, அடுத்த 9ஆவது ஓவரில் கிளாசெனையும் அர்ஷ்தீப் சிங் போல்டாக்கினார்.
இதனால், தென்னாப்பிரிக்கா பவர்பிளே முடிவில் 10 ஓவர்களில் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆவேஷ் கான் அடுத்தடுத்து மார்க்ரம், முல்டரின் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். தொடர்ந்து, 13ஆவது ஓவரிலும் மில்லரை ஆவேஷ் கான் ஆட்டமிழக்க செய்ய டாப் 7 பேட்டர்களை தென்னாப்பிரிக்கா இழந்தது. தொடர்ந்து, கேசவ் மகராஜ் 4 ரன்களில் ஆவேஷ் கானிடம் வீழ்ந்தார்.
அதன்மூலம், கடைசி கட்ட விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் வீழ்த்த தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பெஹ்லுக்வாயோ அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 5, ஆவேஷ் கான் 4, குல்தீப் யாதவ் 1 விக்கெட்டுகளை எடுத்தனர்
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடருக்கு பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறும் நிலையில், டிச.19 மற்றும் டிச. 21ஆம் தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ