IPL 2024 RR vs RCB Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான தொடரின் 19ஆவது லீக் போட்டி இன்று பரபரப்பாக நடைபெற்றது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி மாற்றம் ஏதும் செய்யாத நிலையில், பெங்களூரு அணி அனுஜ் ராவத்திற்கு பதில் சௌரவ் சவுகான் விளையாடினார். ஆர்சிபியில் இரண்டாம் இன்னிங்ஸில் சௌரவ் சவுகானுக்கு பதில் Impact Sub ஆக ஹிமான்ஸூ சர்மா களம்கண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி Impact Player ஆப்ஷனையே எடுக்கவில்லை. 


விராட் கோலி நிதான சதம்


முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்க கிடைத்தாலும் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. 14 ஓவர்கள் வரை விராட் கோலி - டூ பிளெசிஸ் ஜோடி தாக்குபிடித்து 125 ரன்களை எடுத்தது. டூ பிளெசிஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி கடைசி வரை நின்று சதம் அடித்தார். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை ஆர்சிபி எடுத்தது. 


மேலும் படிக்க | CSK Vs SRH : “தோத்துட்டே இருக்கீங்களே..” சி.எஸ்.கே ரசிகர்களின் குமுறல்கள்! வைரலாகும் மீம்ஸ்..


ஜெய்ஸ்வால் டக்அவுட்


விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 113 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட்டுகளையும், பர்கர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே ஜெய்ஸ்வால் டக்அவுட்டாகி வெளியேறினார். இது ராஜஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் ஓப்பனர்கள்தான் இந்த முறை மிகவும் சொதப்பியுள்ளனர். 


பவர்பிளேவில் கலக்கிய பட்லர்


இருப்பினும், ஜாஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து பெங்களூரு அணியை கதிகலங்க வைத்தார் எனலாம். பவர்பிளேவில் 54 ரன்களை ராஜஸ்தான் எடுத்து அசத்தியது. குறிப்பாக, மயங்க் தாஹர் வீசிய 6ஆவது ஓவரில் 18 ரன்களை பட்லர் குவித்தார். தொடர்ந்து இந்த ஜோடி 148 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பராக் 4 ரன்களுக்கும், ஜூரேல் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 


சிக்ஸருடன் ஆட்டத்தை முடித்த பட்லர் 


இருப்பினும், பட்லர் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துகொடுத்தார். கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 1 ரன்னே தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் பட்லர் 94 ரன்களுடன் இருந்தார். கேம்ரூன் கிரீன் முதல் பந்தை பவுண்சராக வீச, அதில் சிக்ஸ் அடித்து பட்லர் தனது 6ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்து, வெற்றியையும் உறுதி செய்தார். அவர் 58 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் சதம் அடித்தார். விராட் கோலியை விட பட்லர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். குறிப்பாக, அவர் நிறைய டபுள்ஸ் ஓடியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை ஜாஸ் பட்லர் வென்றார். 



ஆர்சிபி பேட்டிங்கில் செய்த தவறுகள்...


ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பெரிய தவறுகளை செய்தது. விராட் கோலி நிதானமாக ரன்களை அடித்துகொண்டிருந்தார். இதை தவறு என்று கூற முடியாது. ஆனால், மறுமுனையில் யாருமே அதிரடி காட்டவில்லை என்பதுதான் பெரிய சோகம். டூ பிளெசிஸ் போராடினார், மேக்ஸ்வெல் வந்தவுடன் கிளம்பினார். ஆர்சிபி அணி அறிமுக வீரரை கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு முன் இறக்கியது. ஆனால் அவரும் சோபிக்கவில்லை. கடைசி கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிடாமல் கேம்ரூன் கிரீனை இறக்கிவிட்டது பெரிய தவறு. குறிப்பாக, பர்கர் வீசிய 19ஆவது ஓவரில் வெறும் 4 ரன்களே எடுக்கப்பட்டது.


ஆர்சிபி பந்துவீச்சில் செய்த தவறுகள்...


பந்துவீச்சை பார்த்தால் வைஷாக் விஜயகுமாரை எடுக்காமல்விட்டு இம்முறையும் தவறு செய்தது ஆர்சிபி. அவரின் வேரியஷன்கள் இந்த ஆடுகளத்தில் நன்றாக எடுபடும். பட்லர் V திசையில் பலமானவர், ஆனால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அவர் ரன் அடிப்பதற்கு ஏதுவாகவே வீசினர், பெரிய பிளான் எதுவும் அவர்களின் பந்துவீச்சில் தெரியவில்லை. ரீஸ் டாப்ளி நன்றாக வீசினாலும் சிராஜ் மிக சுமாராகவே வீசினார். தரமான சுழற்பந்துவீச்சு இல்லாதது அவர்களை சோதித்தது எனலாம். பீல்டிங்கும் இன்று மோசமாக இருந்தது, இதனை ஆர்சிபி கேப்டனும் ஒப்புக்கொண்டார். இத்தனை தவறுகளையும் திருத்தி, விராட் கோலியை மட்டும் நம்பாமல் பெங்களூரு அணி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும்பட்சத்தில் வெற்றி வசப்படலாம். 


மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் இந்த சிஎஸ்கே வீரர் நிச்சயம் இருப்பார்... இந்திய அணிக்கு கவலையே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ