பிருத்வி ஷாவின் அசாத்திய சாதனை... இந்திய கிரிக்கெட்டில் இதுதான் முதல்முறை - என்ன தெரியுமா?
Ranji Trophy 2024: ரஞ்சி டிராபி போட்டியில் சதம் அடித்ததன் மூலம் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா, இதுவரை இந்தியர் எவரும் செய்யாத சாதனையை செய்துள்ளது குறித்து இதில் காணலாம்.
Ranji Trophy 2024: இந்தியாவில் இந்தாண்டு கிரிக்கெட் சீசன் அனல்பறந்து வருகிறது எனலாம். இந்திய சீனியர் ஆடவர் அணி, இந்தாண்டின் முதல் போட்டியை, தென்னாப்பிரிக்காவில் விளையாடியது. அந்த அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வென்று இந்தாண்டை வெற்றியுடன் தொடங்கியது எனலாம்.
மேலும், சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி (Team India) தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (IND vs ENG Test Series) விளையாடி வருகிறது. சீனியர் ஆடவர் அணி ஒருபுறம் இருக்க, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கோப்பை (ஓடிஐ) தொடர் கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது.
பழிதீர்க்குமா ஜூனியர் அணி?
இந்த தொடரில் இந்திய ஜூனியர் அணி இறுதிப்போட்டியில் (U19 World Cup 2024) ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது. கடந்தாண்டு நவம்பரில் சீனியர் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு ஜூனியர் அணி பழித்தீர்க்கும் என ஆவலுடன் இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சர்வதேச அளவில் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளும் தற்போது சூடுபறக்கிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2024: ரோகித் சர்மாவை அன் பாலோ செய்த ஹர்திக் பாண்டியா..! MI-ல் என்ன நடக்கிறது?
ரஞ்சி டிராபி தொடரின் (Ranji Trophy 2024) ஆறாவது சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கின. ஏழாம் சுற்றுக்கு பின் நாக்-அவுட் சுற்றுப்போட்டிகள் நடைபெற உள்ளன. பிளேட் குரூப்பில் தற்போதே நாக்அவுட் போட்டிகள் தொடங்கியும்விட்டன. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த உள்ள சர்ஃபராஸ் கான், ரஜத் பட்டிதார், முகேஷ் குமார் ஆகியோர் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் கொடுத்த பிருத்வி ஷா
உள்ளூர் போட்டிகள் என்பது இந்திய அணிக்குள் நுழையும் துருப்புச்சீட்டு போன்றது. எனவே, பல வீரர்கள் அதனை விளையாடி தங்களை நிரூபிக்க கட்டாயத்தில் இருக்கின்றனர். குறிப்பாக, மும்பை வீரர் பிருத்வி ஷா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின், அவரது பிட்னஸின் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
பிருத்வி ஷா (Prithvi Shaw) கடந்த ஆறு மாதங்களாக கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக விளையாடி வந்தபோது அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதத்திலேயே அவருக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிட்னஸ் தேர்வில் தேறியதை தொடர்ந்து ரஞ்சி டிராபியில் கம்பேக் கொடுத்தார்.
முதல் செஷனிலேயே முரட்டு சதம்
ஐந்தாவது சுற்றில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணிக்கு பிருத்வி ஷா திரும்பினார். மும்பை அணி அந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பிருத்வி ஷாவால் 35 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த வகையில், ராய்ப்பூர் நகரில் நடைபெறும் சத்தீஸ்கருக்கு எதிராக நேற்று தொடங்கிய 6ஆவது சுற்று போட்டியில் அவர் மீதுதான் பலரின் கவனமும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சதம் அடித்து மிரட்டியுள்ளார். அவர் 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | ஜடேஜா தந்தை கண்ணீர் மல்க பேட்டி..! மருமகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
குறிப்பாக முதல் செஷனிலேயே பிருத்வி ஷா சதம் அடித்திருக்கிறார். இதன்மூலம், முதல் தர கிரிக்கெட்டின் முதல் நாள் முதல் செஷனில் இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பிருத்வி ஷா பெற்றிருக்கிறார். இதற்கு முன், அசாம் அணிக்கு எதிராகவும் இதேபோன்று முதல் நாள் முதல் செஷனிலேயே சதம் அடித்திருந்தார், குறிப்பாக அந்த பட்டியில் 379 பந்துகளில் 383 ரன்களையும் அவர் அடித்தார். இதுதான் ரஞ்சி டிராபி வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாம் தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
இந்த சதம் நிச்சயம் அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். தொடர்ந்து இதே ஃபார்மில் நீடித்தால், நிச்சயம் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனலாம். 24 வயதான பிருத்வி ஷா பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளானவர், இருப்பினும் அவரது விளையாட்டு திறனில் அவர் கவனம் செலுத்தினால் நிச்சயம் சர்வதேச அளவில் கால் பதிக்கலாம்.
தமிழ்நாடு vs கர்நாடகா
மறுபுறம், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி, கர்நாடகாவுடன் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 151 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். நட்சத்திர வீரர்களான மயாங்க் அகர்வால் 20, மனீஷ் பாண்டே 1 ரன்களுக்கு அவுட்டானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர் 3, அஜித் ராம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியை நீங்கள் மைதானத்திற்கு இலவசமாகவே காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ