கராச்சி தேசிய மைதானத்தில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணியில் பேட்ஸ்மேன் இப்திகர் அகமது மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்களை தவிர, ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது ரிஸ்வான் மற்றும் பேட்ஸ்மேன் அபிட் அலி ஆகியோரும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த அணி பாகிஸ்தான் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரும் தலைமை தேர்வாளருமான மிஸ்பா-உல்-ஹக் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது என கூறப்படுகிறது.


இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, முதுகு வலி பிரச்சனை காரணமாக இலங்கைத் தொடருக்கான அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். மேலும் இவர் லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) புத்துணர்வு பயிற்சி மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணியைப் பிரதிபலிக்கும் வகையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் முழுமையான கலந்துரையாடல்கள் மற்றும் உத்தமமான திட்டமிடலுக்குப் பிறகு, சிறந்த அணியை ஒன்றாக இணைத்துள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து மிஸ்பாவை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தெரிவிக்கையில்., "இந்த சீசனில் நாங்கள் விளையாடும் 50 ஓவர் போட்டிகள்தான் இவை, அவற்றின் உகந்த பயன்பாட்டை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் போது, ​​எளிதான ஆட்டங்கள் இல்லை என்பதையும், கிரிக்கெட்டில் எளிதான எதிரிகள் இல்லை என்பதையும் நான் உணர்ந்தேன், எனது அனுபவத்தை கொண்டு இந்த அணியை உறுவாக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


திரும்ப அழைக்கப்பட்ட ஐந்து வீரர்கள் குறித்து மிஸ்பா கூறுகையில், "திரும்ப அழைக்கப்பட்ட ஐந்து வீரர்களின் தேர்வில் குளருபடிகள் ஏதும் இல்லை, அவர்களது திறமையின் அடிப்படையிலேயே அழைக்கப்பட்டுள்ளனர். இப்திகார் அகமது ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அதே வேளையில் ஸ்பின்னரும் கூட. இலங்கை அணியை எதிர்கொள்ள தேவையான பலத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். முகமது நவாஸ் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர்கள் வலுவான செயல்திறன் கொண்டிருந்த போதிலும், முகமது ரிஸ்வான், உஸ்மான் ஷின்வாரி மற்றும் ஆபிட் அலி ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது வேதனையளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்த ஐந்து வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது திறமையை நிரூபிக்கவும், ஒருநாள் அணியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தவும் சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தலைமை தேர்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணி பின்வருமாறு:


சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம், ஆபித் அலி, ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், முகமது ஹஸ்னைன், இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், உஸ்மான் கான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்