IND vs PAK: ரோஹித், கில் அடுத்தடுத்து அவுட்; குறுக்கிட்ட மழை - இந்திய வெற்றிக்கு என்ன இலக்கு தேவை?
Asia Cup 2023, IND vs PAK: சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கில், ரோஹித் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இலங்கையின் கொழும்பு பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
வானிலையில் போட்டி நடைபெறும் இடத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த முடிவை எடுத்திருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியுடனான அதே பிளேயிங் லெவனுடன் இன்று களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு பதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டார். மேலும், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டு ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மான் கில் ஜோடி வழக்கம் போல் ஓப்பனிங்கில் களமிறங்கினர். ஆனால், வழக்கம் போல் இன்றி ஷாகின் அப்ரிடி பந்து முதல் ஓவரிலேயே சிக்ஸருக்கு அனுப்பி ரோஹித் அழுத்தத்தை தணித்தார். மறுமுனையில் நசீம் ஷா நல்ல வேகத்திலும், லெந்த் & லைனிலும் பந்துவீசி ரன்களை கட்டுபடுத்தினார். ஆனால், ஷாகின் அப்ரிடி பந்துவீச்சை கில் சிதறடித்து, அடுத்தடுத்து பவுண்டரிகளை குவித்தார். குறிப்பாக, நசீம் ஷா ஓவரில் அதிர்ஷட்வசமாக ஒரு கேட்சில் இருந்து தப்பித்தார்.
மேலும் படிக்க | INDvsPAK: கேஎல் ராகுல் ரிட்டன்ஸ், உட்கார வைக்கப்பட்ட ஐயர்
தொடர்ந்து, ஷாகின் அப்ரிடி விரலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ஃபாகிம் அஷ்ரப் பந்துவீசினார். அவரும் சுமாராக பந்துவீசினாலும் இந்தியாவுக்கு ரன்கள் வந்துகொண்ட இருந்தது. முதல் பவர்பிளே ஓவர்களில் (1-10 ஓவர்கள்) இந்தியா விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை குவித்தது. தொடர்ந்து, கில் 37 பந்துகளில் அரைசதம் அடித்தும் அசத்தினார்.
அதன்பின், ஷதாப் கான் 13ஆவது ஓவரை வீச வந்தார். 2 சிக்சர்கள், 1 பவுண்டரியை ரோஹித் அடிக்க மொத்தம் அந்த ஓவரில் 19 ரன்கள் குவிக்கப்பட்டது. அடுத்து 15ஆவது ஓவரையும் ஷதாப் கான் தான் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலயே சிக்சர் அடிக்க, ரோஹித் சர்மா 41 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் குவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தாண்டி இந்த ஜோடி பேட்டிங் பிடித்த நிலையில், 17ஆவது ஓவரையும் ஷதாப் கான் வீச வந்தார். 2 ஓவர்களில் 31 ரன்களை அவர் கொடுத்திருந்தாலும் கேப்டன் பாபர் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார். இம்முறை ஷதாப் வலையில் ரோஹித் சிக்கி, 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில், 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். பந்து பெரிதாக திரும்பாத நிலையில், இன்சைட் அவுட் ஷாட் அடிக்க, லாங்-ஆப் திசையில் நின்ற அஷ்ரப் அசத்தலாக அந்த கேட்சை பிடித்த ரோஹித்தை வெளியேற்றினர். இந்த ஜோடி 121 ரன்களை குவித்தது.
களத்திற்குள் விராட் கோலி வந்தார். உடனே அடுத்த ஓவரில் (18 ஓவர்) ஷாகின் அப்ரிடி பந்துவீச வந்தார். அவர் அதுவரை 3 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்திருந்தார். அவர் வந்த உடனேயே விக்கெட்டும் விழுந்தது. அந்த ஓவரின் 5ஆவது பந்தில் கில் ஆட்டமிழந்தார். ஷாகினின் ஸ்லோயர் ஷார்ட் பிட்ச் பந்தில் சிக்கிய கில், சல்மானிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 58 ரன்களை சேர்ந்திருந்தார். நான்காவது வீரராக இஷான் கிஷன் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுல் களமிறங்கினார். தற்போது விராட் கோலி - ராகுல் களத்தில் உள்ளனர்.
தற்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்டப்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை சேர்த்துள்ளது. ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். விராட் 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இனி என்னாகும்...?
தற்போதைய நிலையில், இந்தியாவால் பேட்டிங்கை இன்று முழுவதும் தொடர இயலாவிட்டால் நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும். மேலும், தற்போதைய ஸ்கோரின் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். 20 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டால் 181 ரன்களும், 24 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டால் 206 ரன்களும் பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்ய நேரும்பட்சத்தில், 280 முதல் 300 வரை ரன்களை குவிப்பது பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். இருப்பினும், மழை அதிகமாக பெய்வதால் மைதானத்தில் அவுட்-பீல்டில் மழை நீர் தேக்கம் அடைந்துள்ளது பேட்டிங்கை கடினமாக்கும்.
மேலும் படிக்க | ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டிகள் ஹைலைட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ