இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. 


நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பெர்ன் நகரில் துவங்கியது.



இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 169.4 ஓவர்கள் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து ஆட்டத்தினை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்தியா தரப்பில் புஜாரா 106(319), விராட் கோலி 82(204) ரன்கள் குவித்தனர். 


இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸி., தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹரிஸ், அரோண் பின்ச் ஆகியோரை களமிறக்கியது. இரண்டாம் நாள் முடிவடைந்த நிலையில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை துவங்கிய ஆஸி., வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 66.5 பந்துகளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸி., தரப்பில் ஹாரிஸ், டிம் பெயின் தலா 22 ரன்கள் குவித்தனர். சுமார் 292 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸி., இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட கோரியது.


இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் குவித்திருந்தது. பின்னர் நான்காம் நாள் ஆட்டம் துவங்கி சில ஓவர்களிலேயே அடுத்த 3 விக்கெட்டுகளை இழக்க, ஆட்டத்தின் 37.3-வது பந்தோடு டிக்ளர் (106-8) செய்துக்கொண்டது. இந்தியா தரப்பில் மொய்ங்க் அகர்வால் 42(102) ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியா வீரர் பெட் கும்மின்ஸ் 6 விக்கெட் குவித்து இந்தியாவை நிலை குலையவைத்தார்.


இதனையடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


இதைத்தொடர்ந்து இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் துவங்கியது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் வெளியேறினார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் பும்ரா, ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை குவித்தனர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.


முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகளை குவித்த ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.