ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரோலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் தனது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமகா கேப்டன் விராட் கோலி 123(257) ரன்கள் எடுத்தார். 


43 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சை நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியா 243 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியாவை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது.



இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. ஆரம்பமே அதிர்ச்சியாக லோகேஷ் ராகுல் 0(4) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4(11) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 


தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, அதிகபட்சமாக ரஹானே 30(47) மற்றும் ரிஷாப் பன்ட் 30(61) ரன்கள் குவித்தனர். ஆட்டத்தின் 56-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை ஆஸி., அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.