உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ICC ஒரே நிறத்திலான சீருடையை இரு அணிகளும் அணிந்து விளையாட அனுமதி மறுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக முன்னேற்பாடாக அணியின் பிராதனமாக உள்ள சீருடையின் நிறத்திற்கு மாறுதலாக இரண்டாவதாக ஒரு சீருடையை தயார் செய்யும்படி முன்னதாகவே ICC உத்தரவிட்டிருந்தது.


இந்தியா கிரிக்கெட் அணியின் சீருடையினை பொறுத்தவரையில் நீல நிறத்தினை பிரதான நிறமாக கொண்டது. இந்திய அணியை போன்றே இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். 


இதில் இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படும்போது ஏதாவது ஒரு அணி தங்கள் அணியின் இரண்டாவது சீருடையை அணிந்து விளையாட வேண்டும் என ICC அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று உடையில் ஆட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை நடத்துவதால், அந்த அணி அதே ஜெர்சியில் விளையாட முடியும். இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதால், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேப்போல் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி தங்கள் சட்டைகளின் நிறத்தை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.