இந்தியா vs நியூசிலாந்து: இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறிய இஷாந்த் சர்மா
தனது கணுக்காலில் வலி ஏற்பட்டதால் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியில் விளையாட மாட்டார்.
கிறிஸ்ட்சர்ச்: இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சனிக்கிழமை தொடங்க விளையாட உள்ள நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இஷாந்த் தொடர்ந்து வலைபயிற்சி மேற்கொண்டார். ஆனால் வெள்ளிக்கிழமை அவர் வலைபயிற்சியில் காணப்படவில்லை. அதுக்குறித்து அணி நிர்வாகம், அவருக்கு கணுக்காலில் வலி இருப்பதாக கூறினார்கள். இரண்டாவது டெஸ்டில் இஷாந்த் விளையாட மாட்டார் என்று ஒரு கிரிக்கெட் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
"அவர் தனது கணுக்காலில் வலி இருப்பதாகக் கூறியதால், பயிற்சியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் ரஞ்சி டிராபியில் விதர்பாவுக்கு எதிராக விளையாடும் போது இஷாந்த் இந்த காயம் ஏற[ஏற்பட்டது. ஆனால் அவர் குணமடைந்து, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளராக இஷாந்த் இருந்தார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இஷாந்தின் இடத்தை நிரப்ப உமேஷ் யாதவ் மற்றும் இளம் வீரர் நவ்தீப் சைனி இருவரில் ஒருவர் ஆட உள்ளார். நவ்தீப் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. அதே நேரத்தில், அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இளம் பேட்ஸ்மேன் பிருத்வி சாவ்வுக்கு காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். எனவே அவர் விளையாடத் தயாராக உள்ளார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் ஆட்டம் ஆரம்பமாகும் போது தெரியவரும்.
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை (பிப்ரவரி 29) முதல் கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால், விராட் தலைமையிலான இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.