ஆரம்பமே சொதப்பல்..!! 39 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா
463 ரன்கள் பின்தங்கி உள்ள தென் ஆப்பரிக்கா அணி நாளை நடைபெற உள்ள மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடும்.
விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa) இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் மயங்க இருவரும் களம் இறங்கினார்கள். நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்தனர். ரோகித் 176 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் 157 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நேற்று முதல் நாளில் இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததாலும், மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரோகித் 115 ரன்னுடனும், மயங்க 84 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 176(244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். சேதேஷ்வர் புஜாரா (6), விராட் கோலி (20), அஜின்கியா ரஹானே (15), ஹனுமா விஹாரி (10), விருத்திமான் சஹா (21) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் மறுபுறம் அதிரடியாகவும், நிதானமாகவும் ஆடி இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் மாயங்க் அகர்வால். இது தான் இவரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டியின் ரன்கள் ஆகும். அவர் 215 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா 30 ரன்னும், அஷ்வின் 1 ரன்னும் எடுத்திருந்த போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிக்ளர் செய்வதாக அறிவித்தார். 7 விக்கெட் இழப்பிருக்கு 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணியில் ஐடன் மார்க்ராம் (5), தியூனிஸ் டி ப்ரூயின் (4), டேன் பீட் (0) ரன்னுடன் அவுட் ஆனார்கள். டீன் எல்கர்* (27) மற்றும் டெம்பா பவுமா* (2) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 463 ரன்கள் பின்தங்கி உள்ள தென் ஆப்பரிக்கா அணி நாளை நடைபெற உள்ள மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடும். இந்திய அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.