#INDvWI: 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மாபெரும் வெற்றி; தொடர் சமநிலை 1-1
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு (India vs West Indies) இடையிலான இன்று மதியம் 1.30 மணி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் தொடர் யாருக்கு என்று தெரிந்துவிடும்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் (Vizag ODI) மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து,, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 159(138) மற்றும் லோகேஷ் ராகுல் 102(104) இருவரும் சதம் அடித்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) நன்றாகவும், அதிரடியாகவும் ஆடி அரை சதம் அடித்து 53(32) ரன்களளுடன் அவுட் ஆனார். மறுமுனையில் விக்கெட் கீப்பட் ரிஷப் பந்த் 39(16) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷெல்டன் கோட்ரெல் இரண்டு விக்கெட்டும், கீமோ பால், அல்சாரி ஜோசப் மற்றும் கேப்டன் கீரோன் பொல்லார்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து 388 ரன்கள் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் கண்டது. 61 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அதற்கு அடுத்து சீரான இடைவெளியில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்றினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், அதாவது 33 வது ஓவரை வீசிய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், நான்காவது பந்தில் ஷாய் ஹோப், ஐந்தாவது பந்தில் ஜேசன் ஹோல்டர், ஆறாவது பந்தில் அல்சாரி ஜோசப்பை அவுட் செய்து ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 78(85) மற்றும் நிக்கோலஸ் பூரன் 75(47) ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் கீமோ பால் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா மூன்று விக்கெட்டும், ஜடேஜா இரண்டு விக்கெட்டும், சர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.