கடைசி டி20 போட்டி: ஜிம்பாப்வே போராடி தோல்வி தழுவியது. தொடரை இந்தியா கைப்பற்றியது.
இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜிம்பாப்வேயின் ஆக்ரோஷமான பந்து வீச்சால் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 53 ரன்களே எடுத்திருந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கேதர் ஜாதவ் நிலைத்து நின்று விளையாடி 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். கடைசியாக இந்திய அணியை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
பின்னர் 139 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வேக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ரன் எளிதாக எடுக்க விடவில்லை. சீரான இடைவெளியில் ஜிம்பாப்வேயின் விக்கெட் சரிய, இந்தியாவின் கை படிப்படியாக ஓங்கியது. கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய பரிந்தர் சரண் முதல் பந்தை மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸை அடித்தார் மரூமா. அடுத்த பந்து வைடு வகையில் 1 ரன் வந்தது. அடுத்த பந்து யார்க்கர் முயற்சியில் அதிக உயரம் வந்த புல்டாஸாக மாற பந்து கவர் திசையில் மரூமா பவுண்டரி விளாசினார், இது நோ-பால் எனவும் அறிவிக்கப்பட்டது. 2-வது பந்தை மீண்டும் வீசிய சரண் ரன் எடுக்க முடியவில்லை. 3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தில் மரூமா 1 ரன் எடுத்தார். 5-வது பந்தை சந்தித்த சிகும்பரா மேலேறி வந்து சுழற்ற ஷார்ட் தேர்ட் மேனுக்கு வாய்ப்பில்லாமல் தேர்ட்மேனில் பவுண்டரி ஆக, கடைசி பந்து 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. ஆனால் சரண் கடைசி பந்தை தாழ்வான புல்டாசாக வீச மட்டையின் அடி விளிம்பில் பட்டு கவர் திசையில் அருகிலேயே சாஹலிடம் கேட்ச் ஆனது அவுட் ஆனார் சிகும்பரா, இந்தியா 3 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தவல் குல்கர்னி மற்றும் பரிந்தர் சரண் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், சாஹல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக் கேதர் ஜாதவ்வும், தொடர் நாயகனாக சரணும் தேர்வு செய்யப்பட்டனர்.