ஷிகர், பூம்ரா அதிரடி ஆட்டத்தால் வெற்றியை ருசித்தது இந்தியா!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்களா களமிறங்கிய ஷிகர் தவான் 117(109) மற்றும் ரோகித் சர்மா 57(70) ரன்கள் குவித்து அணிக்கு பலமான துவக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி 82(77), ஹர்டிக் பாண்டயா 48(27), டோனி 27(14) ரன்கள் குவித்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்
இதன்மூலம் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 2 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் நிதானமான ஆட்டத்தை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தி வந்தது.
துவக்க வீரராக களமிறங்கிய அரோண் பின்ச் 36(35) ரன்களில் வெளியேற, மறுமுனையில் டேவிட் வார்ணர் 56(84) ரன்கள் குவித்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 69(70), உஸ்மான் கௌஜா 42(39) என அடுத்தடுத்து வெளியேற அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி 55(35) ரன்கள் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இறுதி பந்தில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே குவித்தது ஆஸ்திரேலியா. இந்தியா தரப்பில் பூம்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். யுவேந்திர சாஹல் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.