இதுதான் சரியான நேரம்! ஓய்வை அறிவித்த தோனியால் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்!
கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் கேப்டன்சியின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்தியாவிற்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார் பரிந்தர் ஸ்ரான். இந்திய அணியில் அறிமுகமாகும் முன்பு 8 List A போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடியது தான் பரிந்தர் ஸ்ரானின் கடைசி சர்வதேச போட்டியாக உள்ளது.
தற்போது தனது ஓய்வு குறித்த அறிவிப்பை பரிந்தர் ஸ்ரான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "நான் அதிகாரப்பூர்வமாக எனது கிரிக்கெட் ஷூக்களை தொங்கவிடுகிறேன். இப்பொது எனது பயணத்தை நன்றியுணர்வுடன் திரும்பிப் பார்க்கிறேன். 2009ம் ஆண்டு குத்துச்சண்டையிலிருந்து கிரிக்கெட்டுக்கு மாறியது எனக்கு எண்ணிலடங்காத, நம்பமுடியாத பரிசை அளித்துள்ளது. எனது வேகப்பந்து வீச்சு எனது அதிர்ஷ்ட வசீகரமாக மாறியது. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் 2016ம் ஆண்டு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக உயர்ந்த கவுரவத்தை நான் பெற்றேன்.
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சின்னதாக இருந்தாலும், அதன் மூலம் கிடைத்த நினைவுகள் என்றென்றும் என் மனதில் இருக்கும். எனது பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களையும் நிர்வாகத்தையும், எனக்கு இவற்றையெல்லாம் கொடுத்த இறைவனுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஓய்வை அறிவிக்க இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன், நான் இந்த புதிய அத்தியாயத்தை தொடங்கும் முன்பு பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் பிசிசிஐக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு பெயர் கொடுத்த கிரிக்கெட்க்கு நன்றி. வானத்தைப் போல, கனவுகளுக்கும் எல்லை இல்லை, எனவே கனவு காணுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் போது 24 வயதான பரிந்தர் ஸ்ரான் தேசிய அணியில் அறிமுகமானார். இவருக்கு பிறகு ஆஷிஷ் நெஹ்ரா 2016ம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார், ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்குக் கருதப்படவில்லை. பரிந்தர் ஸ்ரான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக 2011 முதல் 2021 வரை விளையாடினார். 18 முதல்தர போட்டி, 31 லிஸ்ட் ஏ போட்டி மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 31 வயதாகும் பரிந்தர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் 2019ம் ஆண்டு கோப்பையை வென்ற மும்பை அணியில் ஒரு வீரராக இருந்தார். இதுவரை 24 ஐபிஎல் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ