டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இந்நிலையில், தற்போது ஜமைக்காவில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது பந்துவீச்சு திறனை மீண்டும் நிரூபித்துள்ளார் ஷமி.


இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு சுருண்டது.


இதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வாலை அவுட் செய்ததன்மூலம் முகமது ஷமி தனது 42-ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 150-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


இப்பட்டியலில் இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் (39 போட்டிகள்), ஜவகல் ஸ்ரீநாத் (40 போட்டிகள்) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.


அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் 67 டெஸ்ட்களில் 236 விக்கெட்டுகளையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.