2020-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

33 வயதான சானியா இறுதியாக அக்டோபர் 2017-இல் நடந்த சீனா ஓபனில் பங்கேற்றார். இந்த நீண்டகால இடைவேளியால் ஹோபார்ட் இன்டர்நேஷனலில் அவர் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள உக்ரைனின் நாடியா கிடெனோக்குடன் அணி சேருவார் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய ஓபனில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா இணைந்து விளையாடவுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் என்பவரை மணந்த சானியா, கடந்த ஆண்டு அக்டோபரில் மகன் இஷானைப் பெற்றெடுத்தார். தற்போது மகப்பேரு விடுப்புக்கு பின்னர் டென்னிஸ் களத்திற்கு திரும்ப விரும்பவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "நான் ஹோபார்ட்டில் விளையாடுவேன், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபனிலும் பங்கேற்பேன்" என குறிப்பிட்டுள்ளார். 


அதற்கு முன்னதாக அடுத்த மாதம் மும்பையில் நடைபெறும் ஒரு போட்டிகளிலும் (ITF Women's tournament) விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் விளையாடுவது அவரது மணிக்கட்டு காயத்தைப் பொறுத்தது என்று அவர் கூறியுள்ள போதும், நிச்சயமாக ஹோபார்ட் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவார் என கூறப்படுகிறது.


ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, தான் தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில்., "நீங்கள் ஒரு தாயாக மாறும்போது பல மாற்றங்கள் காணவேண்டி உள்ளது. உங்கள் வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் தூக்க முறையும் மாறுகிறது. இருப்பினும் நான் இப்போது பொருத்தமாக இருப்பதாக உணர்கிறேன், என் உடல் இப்போது என் குழந்தையின் பிறப்புக்கு முன்பு இருந்தது போல் தேறியுள்ளது. ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பு எனது ஓய்வு குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் தற்போது அந்த என்னம் இல்லை" என தெரிவித்துள்ளார்.


மேலும், டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்கிற்கான வாய்ப்பினை பெற முயற்சிப்பதாக சானியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நான் மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளேன், கடந்த முறை துரதிர்ஷ்டத்தால் எங்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை. நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முயற்சிப்பேன், ஒலிம்பிக்கிற்கு முன்பு மூன்று கிராண்ட்ஸ்லாம்களில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.