FIH ஹாக்கி தொடர்; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா...
FIH ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
FIH ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) சார்பில் பெண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடைப்பெற்றது. இத்தொடரின் இறுதி பேட்டிக்கு உலகின் 'நம்பர்-9' இந்திய அணி, 14-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி மோதின.
ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோல் அடித்தார். இதற்கு, 11-வது நிமிடத்தில் ஜப்பானின் கனான் மோரி, ஒரு 'பீல்டு' கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவில், போட்டி 1-1 என சமநிலை பெற்றது.
பின்னர் போட்டியின் 45-வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோலடித்த இந்தியாவின் குர்ஜித் கவுர், 60-வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' மூலம் மீண்டும் ஒரு கோலடித்தார்.
இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி, கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு, பெண்கள் ஹாக்கி இறுதி போட்டியில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இவ்விரு அணிகள், வரும் 2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., "இந்திய அணியின் இந்த வெற்றி மேலும் பல பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.